×

அந்தியூர் அருகே பழங்குடியின மக்களை மிரட்டும் காட்டு யானை

அந்தியூர் : அந்தியூர் அருகே உள்ளது காக்காயனூர் மலையடிவார கிராமம். வன எல்லையான தோணிமடுவில் இருந்து 3 கி.மீ அடர்ந்த வனப் பகுதிக்குள் இந்த கிராமம் உள்ளது. இங்கு 70-க்கும் மேற்பட்ட சோழகர் இன பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் ராகி, கம்பு, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட விளை பொருட்களை பயிர் செய்கிறார்கள்.வானம் பார்த்த பூமியாக உள்ளதால், விதைப்பு, பராமரிப்பு நேரங்கள் போக, சுற்று வட்டார கிராமங்களுக்கு விவசாயக் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.

அடர்ந்த வனப்பகுதி என்பதால் காக்காயனுார் செல்லும் வழியில் பல இடங்களில், ரோட்டை கடந்து செல்லும் யானை வழித்தடங்கள் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் பெரும்பாலும் பொதுமக்கள் ஊரை விட்டு வெளியேறுவதில்லை.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, வனத்திலிருந்து வெளியேறும் ஒற்றை ஆண் யானை, காக்காயனுார் உண்டு உறைவிடப்பள்ளி அருகிலுள்ள, விவசாய நிலங்களில் பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தி வருகின்றன. ஒரு சில நாட்களில், மாலை 5 மணிக்கு வனத்திலிருந்து வெளியேறிய யானையை பட்டாசு வெடித்து விரட்டினர். இரவு நேரத்தில் விவசாய நிலங்களில் புகும் யானை அடுத்தநாள் காலை 8 மணி வரை பயிர்களை சேதப்படுத்துகிறது.

இதனால் அச்சமடைந்த காக்காயனுார் மக்கள், யானையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து, இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: வனத்திலிருந்து வெளியேறும் ஒற்றை ஆண் யானை, 10 நாட்களுக்கும் மேலாக, விளை பொருட்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.

இரவு நேரங்களில் வெளியில் சென்று வர பயமாக உள்ளது. வனப்பகுதி எல்லையில் அகழி, மின்வேலி அமைத்து யானையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
வனத்துறை அலுவலர் கூறியதாவது: ரிசர்வ் பாரஸ்ட்டுக்குள் காக்காயனுார் கிராமம் உள்ளது.

தாமரைக்கரை மலைப் பகுதியில் சோளம் உள்ளிட்ட தினை வகைகள் அறுவடை முடிந்ததால், அங்கிருந்து இப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags : Anthiyur ,Kakkayanur ,Thonimadu ,
× RELATED காஞ்சி காமாட்சியம்மன் கோயில்...