*ரூ.4000 விலை நிர்ணயிக்க கோரிக்கை
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படுவதால், அதற்கு நேரடி கொள்முதல் நிலையம் திறந்து, ரூ.4000 விலை நிர்ணயிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் விவசாயத்தையும், அதனை சார்ந்த தொழிலையும் நம்பியே ஆயிரக்கணக்கான விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் வாழ்ந்து வருகின்றனர்.
மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள், வாழை, மரவள்ளி அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இதேபோன்று, மக்காளச்சோளத்தை விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக மக்காச்சோளத்தை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக, பவானி, அந்தியூர், கோபி, சத்தி உள்ளிட்ட தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளத்தை பயிரிட்டுள்ளனர்.
தற்போது விளைச்சல் நன்றாக இருந்தும், மக்காச்சோளத்திற்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட உழவர் விவாதக்குழு செயலாளர் வெங்கடாச்சலம் கூறியதாவது: ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம் உள்ளிட்ட தாலுகாவில், சுமார் 10 முதல் 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.
மழை காலம் தவிர்த்து பிற காலங்களில் இதனை பயிரிடலாம். 90 நாளில் வளர்ந்து, 120 நாள்களுக்குள் பயிர் அறுவடை செய்யப்படும். ஏக்கருக்கு 30 மூட்டை அளவில் விளைச்சல் கிடைக்கிறது.
சோளமாக மக்களுக்கு பயன்தருவது மட்டுமின்றி, மாட்டு தீவனம், கோழி தீவனங்களுக்கும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட விதை, மருந்து, உரங்கள், கூலி போன்றவை கடுமையாக விலை உயர்ந்து விட்டது.
தற்போது முட்டை விலை கடுமையாக உயர்ந்தும், மக்காசோளத்தின் விலை மட்டும் அதிகரிக்கவில்லை. மக்காச்சோளம் ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோ) அதிகபட்சமாக ஒன்றிய அரசு நிர்ணயித்த ரூ.2,500 அளவிற்கு மார்க்கெட் கமிட்டிகளில் விலை போகிறது.
வெளி வியாபாரிகளும், அதே அளவில் தான் எடுக்கின்றனர். விவசாயிகளுக்கு செலவினம் போக லாபம் போதுமானதாக கிடைப்பதில்லை. இதனால், அரசு சார்பில் நெல்லுக்கு விலை நிர்ணயம் செய்து எடுப்பது போல், மாநில அரசு மக்காச்சோளத்திற்கும் குறைந்தபட்ச விலை நிர்ணயித்து, நேரடி கொள் முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும்.
குவிண்டாலுக்கு ரூ.4,000 விலை நிர்ணயிக்க வேண்டும், அத்துடன் ஊக்க தொகை வழங்க வேண்டும். பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் மக்காச்சோள சாகுபடி விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு தொகை பெற்று தர வேண்டும். மக்காச்சோள விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த கோரிக்கை
அந்தியூர் அடுத்த பர்கூர், தாமரைக்கரை, ஈரெட்டி, தேவர்மலை, மடம் உள்ளிட்ட 33 மலை கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அப்பகுதிகளில் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு ஏக்கருக்கு 20 முதல் 22 குவிண்டால் வரை விளைச்சல் கிடைத்துள்ளது. ஆனால் போதிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: பர்கூர், தேவர்மலை உள்ளிட்ட 33 மலைக்கிராமங்களில், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு மக்காசோள பயிரில் படைப்புழுத் தாக்குதல் அதிகமானதால் மகசூல் இழப்பால் பாதிக்கப்பட்டோம்.
ஆனால், இந்தாண்டு ஒரு சில இடங்களைத் தவிர படைப்புழுக்களின் தாக்குதல் குறைந்ததால் மகசூல் அதிகரித்துள்ளது. தற்போது, மக்காச்சோளம் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மக்காசோளத்தைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் வாடகைக்குக் கிடைக்கிறது.
ஒரு குவிண்டாலுக்கு ரூ.100 முதல் ரூ.120 வரை கட்டணமாக பெறப்படுகிறது. இதன் மூலம் வயலிலேயே இந்திரத்தை கொண்டு வந்து மக்காச்சோளத்தை பிரித்தெடுக்க முடிகிறது.
இந்தாண்டு நல்ல விளைச்சல் இருந்தாலும், யானை, காட்டுப் பன்றிகளால் பயிர் சேதம் அதிகமாக உள்ளது. எனவே, யானை, காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
நாள்தோறும் 12 லட்சம் குஞ்சுகள்:
தமிழ் நாட்டில் 100-க்கும் மேற்பட்ட குஞ்சு பொரிப்பகங்கள் மற்றும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிராய்லர் பண்ணைகள் உள்ளன. நாள்தோறும் சராசரியாக 10 லட்சம் முதல் 12 லட்சம் குஞ்சுகள் பொரிக்கப்படுகின்றன.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த சோளத்தில் 50%, சோயாவில் 40 % கோழி உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. பொள்ளாச்சி, பல்லடம், திருப்பூர் பகுதிகளில் அதிக அளவில் கறிக்கோழி உற்பத்தியும், நாமக்கல் மற்றும் சேலத்தில் முட்டை உற்பத்தியும் செய்யப்படுகிறது.
மக்காச்சோள உற்பத்தியில் 47% கோழித் தீவனமாகவும், 13% கால்நடைத் தீவனங்கள், 12% தொழிற்சாலைப் பயன்பாடுகளுக்கும், 14% மாவுச்சத்து தயாரித்தலுக்காகவும், 7% பதப்படுத்தப்பட்ட உணவுக்காகவும், 6% ஏற்றுமதிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
அதிகளவு கால்நடைத் தீவன தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது. மக்காச்சோள உற்பத்தியில் கர்நாடகா மாநிலம் முதலிடத்திலும், மத்திய பிரதேசம் 2ம் இடத்திலும் மகாராஷ்டிரா 3ம் இடத்திலும் உள்ளது. தமிழ்நாட்டிலும் அதிக பரப்பளவில் பயிர் செய்யப்பட்டு வருகின்றது.
