*சென்னையை சேர்ந்த 5 பேர் காயம்
குன்னூர் : குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 5 பேர் காயமடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட சீசன் தொடங்கியதை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்தை சீர்செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
சென்னையிலிருந்து 15 சுற்றுலா பயணிகள் கடந்த 26ம் தேதி ஊட்டிக்கு வந்தனர். சுற்றுலா பயணத்தை முடித்து விட்டு நேற்று மாலை மீண்டும் சொந்த ஊரான சென்னைக்கு புறப்பட்டனர்.
அப்போது வேன் மரப்பாலம் அருகே வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் இருந்த சுற்றுலா பயணிகள் சத்தம் போட்டு அலறினர்.
அந்த வழியாக வந்தவர்கள் வேனுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். இதில், 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து குன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
