×

கடம்பூர் மலைப்பகுதியில் குடிநீர் கேட்டு பஸ்சை சிறை பிடித்த மலை கிராம மக்கள்

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கோம்பையூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதற்காக அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் மின் மோட்டார் பழுது காரணமாக கடந்த இரு மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணறு கை பம்ப்பில் பொதுமக்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.

மலை கிராம மக்கள் கூத்தம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் நேற்று மாக்கம்பாளையம் மலை கிராமத்தில் இருந்து சத்தியமங்கலம் நோக்கிச் சென்ற அரசு பஸ்சை மறித்து சிறை பிடித்தனர். இதனால் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பொதுமக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த கடம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் பேசி குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து மலை கிராம மக்கள் சிறை பிடிப்பு போராட்டத்தை கைவிட்டனர். இதைத் தொடர்ந்து அரசு பஸ் புறப்பட்டு சென்றது.

Tags : Kadambur hills ,Sathyamangalam ,Kombaiyur ,Kadambur ,Erode district ,
× RELATED காஞ்சி காமாட்சியம்மன் கோயில்...