×

வல்லக்கோட்டை கோயிலில் கல்யாண உற்சவம்

 

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கிருத்திகை, விசாகம், சஷ்டி, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறும். இங்கு ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில் மற்றும் உபயதாரர்கள் சார்பில் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. கல்யாண வரம் வேண்டி திருமணம் முடிந்தவர்களும் இந்த உற்சவத்தில் பெருமளவில் கலந்துகொள்கின்றனர். உற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை 7.30 மணிக்கு உற்சவர் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உட்பட பலவித பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு மணமக்கள் திருக்கோலத்தில் மயில் மண்டபத்திற்கு எழுந்தருளினார். காலை 9.30 மணிக்கு கல்யாண உற்சவம் தொடங்கி 11.30 மணி வரை நடைபெற்றது. கோயில் தலைமை அர்ச்சகர் சந்திரசேகர குருக்கள் தலைமையில் மந்திரங்களும், மங்கலவாத்தியங்களும் ஒலித்திட 11.30 மணிக்கு மாங்கல்யதாரணம் நடைபெற்றது. அப்போது வள்ளி மணாளனுக்கு அரோகரா என்று கோஷமிட்டு பக்தர்கள் வேண்டினர்.

பிறகு கல்யாண கோலத்தில் முருகப்பெருமான் மூன்று முறை பிரகாரத்தில் வலம் வந்தார். கல்யாண உற்சவ ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் குமரதுரை அறிவுரையின்படி கோயில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர்கள் விஜயகுமார், கலைச்செல்வி கோபால், மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

Tags : Vallakottai ,Sriperumbudur ,Subramania Swamy temple ,Krithigai ,Visakha ,Shashti ,
× RELATED மதுராந்தகத்தில் சொகுசு பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து