சென்னை: சென்னை எழும்பூரில் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் சட்டத்துறை செயலாளர் சூரி.நந்தகோபால் தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன் மற்றும் மாநில மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அடுத்த மாதம் 2ம் தேதி முதல் திருச்சி உழவர் சந்தையில் தொடங்கி ஜனவரி 12ம் தேதி மதுரை ஒப்பிலாபுரத்தில் நிறைவடையும் சமத்துவ நடைபயணம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரினை நீக்கி புரியாத மொழியில் பெயர் வைத்த ஒன்றிய அரசினை சட்டத்துறை வழக்கறிஞர்களின் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது,
உச்ச நீதிமன்றத்தின் கிளையினை சென்னையில் அமைத்திட ஒன்றிய அரசினை கூட்டம் வலியுறுத்துகிறது, ஆன்லைன் முறையில் வழக்குகளை தாக்கல் செய்வதற்கு வழக்கறிஞர்களுக்கும், நீதிமன்ற பணியாளர்களுக்கும் ஏற்படும் சிரமங்கள், காலதாமதங்கள் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் உடனடியாக முழுமையான ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறையினை திணித்துள்ள ஒன்றிய அரசைக் கண்டிப்பதோடு,
வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகளை கலந்து பேசி தற்போது நடந்து கொண்டிருக்கும் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தக்க தீர்வு காணுமாறு இக்கூட்டம் வலியுறுத்துகிறது, வழக்கறிஞர் சமூகத்திற்கு பயனளிக்கும் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற முன்வருமாறு இந்திய ஒன்றிய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது உள்பட ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
