ரயில் கட்டண உயர்வுக்கு பயணிகள் கடும் எதிர்ப்பு: திரும்ப பெற கோரிக்கை

 

மதுரை: நாடு முழுவதும் இன்று முதல் அமலாகும் ரயில் கட்டண உயர்வுக்கு பயணியர் சங்கத்தினர், தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், சிறுவியாபாரிகள், தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ரயில் கட்டண உயர்வு நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வருகிறது. சாதாரண வகுப்பில் 215 கி.மீ.க்கும் குறைவான தூரம் பயணித்தால் கட்டண உயர்வு இல்லை. அதற்கும் மேற்பட்ட பயணங்களுக்கு சாதாரண வகுப்பில் ஒரு கி.மீ.க்கு ஒரு பைசா என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மெயில், விரைவு ரயில்களில் 215 கி.மீ.க்கும் மேற்பட்ட பயணங்களுக்கு ஒரு கி.மீ.க்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அனைத்து விதமான ரயில்களிலும் ஏசி பெட்டிகளில் பயணிக்க கி.மீ.க்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 6,500 கி.மீ வரையிலான ரயில்களில் ரூ.10 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தாண்டில் கூடுதலாக ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த கட்டண உயர்வுக்கு பயணியர் சங்கம் மற்றும் தொழிற்சங்கத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து தென் மாவட்ட ரயில் பயணியர் சங்கத்தினர் கூறுகையைில், ‘தென்மாவட்டங்களுக்கு வந்து செல்லும் ரயில்களின் எண்ணிக்கை மிகமிக குறைவு. ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. இதில், கொரோனாவால் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்படவில்லை.

பல பகுதிகளில் பகல் நேர ரயில்கள் பற்றாக்குறையாக உள்ளது. கடந்த சில மாதத்திற்கு முன்னர் தான் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வை ரயில்வே நிர்வாகம் திரும்ப பெற வேண்டும். இதனால், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுவர் என்றனர். ரயில்வே டி.ஆர்.இ.யூ கோட்ட ஒருகிணைப்பாளர் சங்கரநாராயணன் கூறுகையில், ‘ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் கட்டண உயர்வை அறிவிக்காமல், நாடாளுமன்றத்தில் விவாதம் செய்யாமல் கட்டண உயர்வை அமல்படுத்தி இருப்பது ஜனநாயக விரோதமாகும். ஏற்கனவே ஆறு மாதத்திற்கு முன்பு உயர்த்தப்பட்டது.

தட்கல், பிரிமியம் தட்கல் என்று கட்டண உயர்வு உள்ளது. இரண்டாம் படுகை வசதி பெட்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. அரசு துறையான ரயில்வே துறையே இப்படி உயர்த்தினால், தனியார் இயக்குகின்ற பேருந்து கட்டணம் இன்னும் கட்டணம் உயரும் அபாயம் உள்ளது. ரயில் இஞ்சின் இயக்கம் 70 சதவீதத்திற்கு மேல் மின்மயமாக்கப்பட்டு உள்ளது. டீசல் உபயோகம் வெகுவாக குறைந்துள்ளது. மக்களின் நலன் கருதி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்’ என்றார்.

Related Stories: