வேலூர்: பொன்னை அருகே இன்று காலை காம்பவுண்ட் சுவரை இடித்துக்கொண்டு வீட்டிற்குள் புகுந்த டிப்பர் லாரி மோதி மூதாட்டி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த மாதாண்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த சின்னக்குழந்தை என்பவரின் மனைவி கங்கம்மா(82). மகன் முனிரத்தினம்(50). இவருக்கு திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சின்னக்குழந்தை இறந்துவிட்டார். இதனால் கங்கம்மா, தனது மகன் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர்களது வீடு திருவலம்-பொன்னை மாநில நெடுஞ்சாலையோரம் உள்ளது.
இன்று காலை சுமார் 6 மணியளவில் கங்கம்மா எழுந்து தனது வீட்டின் காம்பவுண்ட்டிற்குள் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். இவரது மருமகள் வீட்டின் பின்புறமுள்ள அறையில் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திருவலத்தில் இருந்து பொன்னை நோக்கிச்சென்ற டிப்பர் லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து கங்கம்மா வீட்டின் காம்பவுண்ட் சுவரை இடித்துக்கொண்டு வீட்டிற்குள் புகுந்தது. இதில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த கங்கம்மா, லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர்.
அதற்குள் விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரியின், டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். சமையல் அறையில் இருந்த கங்கம்மாவின் மருமகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். லாரியின் சக்கரத்தில் சிக்கிய கங்கம்மாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
