திருமலை: காதல் திருமணம் செய்த மனைவியை வரதட்சணை கேட்டு 5 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் சரமாரி குத்திக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டம் மாதப்பூரை சேர்ந்தவர் வைஷ்ணவி (24), யூடியூபர். கோருட்லாவை சேர்ந்தவர் ஹரிபாபு (28). இவர்கள் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளனர். பின்னர் இருவரும் இணைந்து புதிதாக யூடியூப் சேனல் தொடங்கி பல்வேறு பதிவுகளை செய்து வந்தனர்.
ஹரிபாபு வீட்டில் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர், மனைவியிடம் அவ்வப்போது வரதட்சணை வாங்கிவரும்படி கூறி டார்ச்சர் செய்துள்ளார். இந்நிலையில் 5 மாத கர்ப்பிணியான வைஷ்ணவியிடம் நேற்று முன்தினம் வரதட்சணை கேட்டு மீண்டும் ஹரிபாபு தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவரிடையே நீண்ட நேரமாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஹரிபாபு, மனைவியை கத்தியால் சரமாரி குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த வைஷ்ணவி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஹரிபாபு, போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
