ஜோதிட ரகசியங்கள்

ஜோதிடத்தில் மிக முக்கியமானது ராசிச் சக்கரம். அந்த ராசிச் சக்கரத்தின் அடிப்படையில்தான் வாழ்க்கைச் சக்கரம் சுற்றுகிறது. 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட ராசி சக்கரத்தின் வீடுகள்தான் நம்முடைய வாழ்க்கையின் வளமையையும், செழுமையையும், வறுமையையும், திறமையையும், இன்ப துன்பங்களையும், தீர்மானிக்கிறது. வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை நிர்ணயித்துக் கொடுக்கிறது. அதற்கு ஒரு மையப்புள்ளி வேண்டுமல்லவா. அந்த மையப்புள்ளிதான் லக்னப் புள்ளி. லக்னப் புள்ளிதான் ராசிச் சக்கரத்தையே தன் விருப்பத்தின்படி சுழல வைக்கிறது. எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பார்கள். இந்த 12 பாவங்கள் அடங்கிய ராசிச் சக்கரமும் ஒரு மனிதனின் உடம்பை பிரதிபலிப்பதாகவே அமைக்கப்பட்டிருக்கிறது.

லக்னம் என்பது தலை.
இரண்டாம் பாவம் முகம்.
மூன்றாம் பாவம் கழுத்து.
நான்காம் பாவம் மார்பு.
ஐந்தாம் பாவம் மேல் வயிறு.
ஆறாம் பாவம் அடிவயிறு.
ஏழாம் பாவம் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகள்.
எட்டாம் பாவம் கழிவுப்பொருள்களை வெளியேற்றும் பகுதிகள்.
ஒன்பதாம் பாவம் தொடை.
பத்தாம் பாவம் முழங்கால்.
பதினொன்றாம் பாவம் கணுக்காலுக்கு மேல் உள்ள பகுதி.
பன்னிரண்டாம் பாவம் கால்கள், பாதங்கள்.

இந்த 12 பாவங்களில் சில பேருக்கு கால்கள் சரியாக இருக்காது. ஆனால் கைகளை வைத்துக்கொண்டு அந்த கால்களின் வேலைகளைச் செய்து விடுவார்கள். அதைப்போல சில பேர்களுக்கு சில அங்கங்கள் இருக்காது. ஆனால் அதைச் சமாளிப்பதற்கு வேறு அங்கங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் தலையே இல்லாவிட்டால் என்ன செய்வது?

அதனால்தான் ஒரு ஜாதகத்தின் கட்டத்தை எடுத்தவுடன் லக்கின பாவத்தைத் தான் எந்த ஜோசியரும் முதலில் எடுப்பார். அங்கே இருந்துதான் அந்த ஜாதகரின் குணங்கள், செயல்கள், எண்ணங்கள் எல்லாம் செயல்படுகின்றன. மூளை சரியாக இருந்தால், மற்ற பாகங்களில் ஏற்படுகின்ற குறைகளைச் சமாளித்து விடலாம். ஆனால் மூளை செயல்படவில்லை என்றால், மற்ற பாகங்களுக்கு சொல்லும் கட்டளைகள் தடுக்கப்பட்டு உடம்பின் நல்ல பாகங்களும்கூட செயல்படாமல் ஸ்தம்பித்துவிடும்.

அதைப் போலத்தான் லக்ன பாவம். ஒருவருக்கு வலிமை குறைந்தால் முடக்கப்பட்ட நிலையில் இருந்தால் அந்த ஜாதகத்தில் எத்தனை யோகங்கள் இருந்தாலும் அவருக்குப் பிரயோஜனப்படாது. இன்னும் சற்று நுட்பமாகப் பார்க்கலாம். முதல் திரிகோண பாவங்கள் லக்னம், ஐந்தாம் பாவம், ஒன்பதாம் பாவம்.

இதை லக்ன பாவம் (1),
பூர்வ புண்ணிய பாவம் (5),
பாக்கிய பாவம் (9)
– என்று சொல்வார்கள்.

இதை யோகமும் ஷேமமும் (5,9) என்று சொல்வார்கள். ஒருவருக்கு யோகமும் இருக்க வேண்டும், ஷேமமும் இருக்க வேண்டும். அது என்ன யோக ஷேமம் என்று கேட்கலாம்.

ஒருவனுக்கு சாப்பாடும் இருக்க வேண்டும். அதைச் சாப்பிடக்கூடிய உடல் நலனும் இருக்க வேண்டும். அதனால்தான் இந்த யோக, ஷேம பாவங்களான ஐந்தாம் பாவத்தையும், ஒன்பதாம் பாவத்தையும், லக்கின பாவத்தோடு இணைத்து ஐந்து ஒன்பது திரிகோண பாவங்களை ஏற்படுத்தினார்கள். ஒரு ஜாதகத்தின் மிகச் சிறந்த பலம் இந்த திரிகோண பாவங்களில்தான் அமைந்திருக்கிறது. அதுமட்டுமில்லை, பூர்வ புண்ணிய பாவம் நன்றாக இருந்தால், லக்ன பாவமும் யோக பாவமும் இயங்க ஆரம்பிக்கும். யோக பாவமான ஒன்பதாம் பாவம் நன்றாக இருந்தால், லக்ன பாவம் இயங்க ஆரம்பித்து விடும்.

பூர்வ புண்ணியமும், பிராரப்தமும் இருந்தால் தானே இந்த உலகத்தில் அவன் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ வந்திருக்கிறான் என்பது தெரியும். அதற்குத்தான் இந்த மூன்று பாவங்களும் (1,5,9) தேவை.

இவை ஒன்றை ஒன்று சார்ந்து இயங்குவதால், எந்த ஜாதகமாக இருந்தாலும் ஒரு பாவம் இயங்கும் போது அதனுடைய திரிகோண பாவங்கள் தானாகவே இயங்க ஆரம்பிக்கும்.

நல்ல சிந்தனை என்று எடுத்துக் கொள்ளுங்கள். இது லக்கின பாவம். நல்ல சிந்தனை எதனால் வரும்? பூர்வ புண்ணியத்தினால் வரும். அப்படியானால் இங்கே ஐந்தாம் பாவம் இயங்க ஆரம்பித்து விடுகிறது. நல்ல சிந்தனையும் பூர்வ புண்ணியமும் இருந்தால், மகிழ்ச்சியைத் தானே அனுபவிப்பான். அந்த அனுபவத்தைதான் ஒன்பதாம் பாவம் (பாக்கிஸ்தானம்) சொல்லுகின்றது. இன்னொரு விதத்தில் பாவத் பாவ முறை என்பார்கள். ஐந்தாம் பாவத்திற்கு ஐந்தாம் பாவம் ஒன்பதாம் பாவம். ஒன்பதாம் பாவத்துக்கு ஐந்தாம் பாவம் லக்ன பாவம்.

லக்ன பாவத்துக்கு ஐந்தாம் பாவம் பூர்வ புண்ணிய பாவம். ஒருவருக்கு சந்தானம் பாக்கியம் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்வதற்கு ஐந்தாம் பாவத்தை மட்டும் பார்த்தால் போதாது. ஐந்தாம் பாவத்திற்கு ஐந்தாம் பாவமான ஒன்பதாம் பாவத்தின் வலிமையையும் தீர்மானிக்க வேண்டும் என்பது ஜோதிடத்தின் அடிப்படை விதி.

இதைதான் பாவத் பாவம் என்பார்கள். எப்படிப் பார்த்தாலும் லக்ன பாவம் வலுவாக இருந்துவிட்டால், மற்ற பாவங்களின் குறைகள் தெரியாத அளவுக்கு வாழ்க்கையை சரி செய்து கொண்டு வாழ்ந்து விடலாம். இனி ஒருவருடைய லக்ன பாவத்திலிருந்து எந்தெந்த விஷயங்களை தீர்மானித்துக் கொள்ளவேண்டும் என்பதைப் பார்ப்போம்.

லக்னம் மூலம் அறியக்கூடிய முக்கிய விஷயங்கள்

லக்னத்தின் அடிப்படையில் ஒருவரின் உடல் அமைப்பு, தோற்றம், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றை அறியலாம். லக்னம், தனிப்பட்ட குண நலன்கள், மனோதிடம், நேர்மறை சிந்தனை அல்லது எதிர்மறைச் சிந்தனை போன்றவற்றை அறிய உதவுகிறது. லக்னம் பலமாக இருந்தால், சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். லக்னாதிபதி வலுவாக இருந்தால், புகழ் மற்றும் செல்வாக்கு ஏற்படும். லக்னத்தின் வலிமை மற்றும் அதன் அடிப்படையில் கணக்கிடப்படும் தசாபுத்திகள் (விதி) ஆயுட்காலம் மற்றும் வாழ்க்கையின் போக்குகளை தீர்மானிக்கின்றன.

ஒருவர் கொண்டிருக்கும் எண்ணங்களின் தன்மை, (நேர்மறை அல்லது எதிர்மறைத் தன்மைகளை) லக்னத்தின் மூலம் கண்டறியலாம். ஒருவரின் இறை நம்பிக்கை மற்றும் பிறப்பின் நோக்கம் பற்றிய விஷயங்களையும் லக்னம் உணர்த்தும். ஜாதகரின் தனித் தன்மையையும், தனித் திறமைகளையும் நிர்ணயித்துக் கொடுப்பதால் ஜாதகரை மற்றவர்களிடமிருந்து பிரித்து காட்டுவது லக்னம்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஜாதகரின் பொதுவான எண்ண ஓட்டங்கள், சுய முயற்சிகள், செயல்திறன், ஆரோக்கியம், பெருந்தன்மை, ஒழுக்கம், புகழ், நிர்வாகத்திறன், நோய் எதிர்ப்புத் திறன், அவர் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்கின்ற விஷயம், தோற்றம் மற்றும் விஷயங்களை வெளிப்படுத்தும் முறை, உடலமைப்பு, போன்ற பல விஷயங்களை லக்னம் வெளிப்படுத்துகிறது.

ஒரு ஜாதகத்தில் லக்னம் பாதிக்கப்பட்டு மற்ற பாவங்கள் சிறப்பாக இருந்தாலும், அந்த பாவங்களால் கிடைக்கக்கூடிய நன்மைகளை அவரால் அனுபவிக்க முடியாது. இதைப் புரிந்து கொள்வதற்கு ஒரு சின்ன உதாரணம் சொல்லுகின்றேன். எனக்குத் தெரிந்து ஒரு பெரிய பணக்காரர். அவர் வீட்டில் 100 பேர் சாப்பிடுகிறார்கள். விதவிதமான சாப்பாடு. ஆனால், அவருக்கு காலையில் உப்பு போடாத கோதுமை கஞ்சி ஒரு டம்ளர், மதியம் உப்பு போடாத வேகவைத்த காய்கறிகளோடு கொஞ்சமாக சாப்பாடு, மாலையில் ஒரு கோதுமை தோசை. இவ்வளவுதான் அவர் சாப்பாடு. காரணம், இங்கே லக்னம் கெட்டுக் கிடக்கிறது. தசா புத்திகளும் அக வாழ்க்கைக்கு சாதகமாக இல்லை.

Related Stories: