விசாரணை அமைப்புகளை கேலி செய்யும் வகையில் ‘இந்தியாவின் தலைமறைவு குற்றவாளிகள் நாங்கதான்’: லண்டனில் இருந்து வீடியோ வெளியிட்டு கிண்டல்

 

புதுடெல்லி: வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்படும் விஜய் மல்லையா மற்றும் லலித் மோடி ஆகியோர் தாங்கள் தான் இந்தியாவின் மிகப்பெரிய தலைமறைவு குற்றவாளிகள் எனக்கூறி வீடியோ வெளியிட்டு இந்தியாவை கேலி செய்துள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்திய லலித் மோடி, வரி ஏய்ப்பு மற்றும் 2009ம் ஆண்டு ஒளிபரப்பு உரிமத்தில் ரூ.125 கோடி முறைகேடு செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவிலிருந்து வெளியேறினார். அதேபோல், பொதுத்துறை வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா, கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டை விட்டு தப்பியோடினார்.

சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில், சிறப்பு நீதிமன்றம் இவரை 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் ‘தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி’யாக அறிவித்ததுடன், இவர்களை நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், லண்டனில் நடைபெற்ற விஜய் மல்லையாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் விஜய் மல்லையாவுடன் நிற்கும் லலித் மோடி, ‘நாங்கள் இருவரும் தான் இந்தியாவின் மிகப்பெரிய தலைமறைவு குற்றவாளிகள்’ என்று சிரித்துக்கொண்டே கிண்டலாகக் கூறியுள்ளார். மேலும், ‘இணையத்தை மீண்டும் அதிர வைக்கும் வகையில் உங்களுக்காக இதைச் செய்கிறேன், பொறாமையில் வெந்து சாகுங்கள்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடுவில் இளம்பெண் ஒருவரை நிற்கவைத்து, இருவரும் சரக்கு கிளாசுடன் போஸ் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்திய விசாரணை அமைப்புகளைக் கேலி செய்யும் வகையில் அமைந்துள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிச் சட்டத்தை எதிர்த்து விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், ‘முதலில் இந்திய நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் ஆஜரானால் மட்டுமே மனுவை விசாரிக்க முடியும்’ என்று நேற்று கறாராகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மெகுல் சோக்சியின் மனு தள்ளுபடி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சட்டவிரோதப் பரிமாற்றங்கள் மூலம் சுமார் 13,000 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்குத் தப்பியோடிய பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி மற்றும் அவரது மருமகன் நீரவ் மோடி ஆகியோர் மீது ஒன்றிய அரசு பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. நீரவ் மோடி லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் கைது செய்யப்பட்ட மெகுல் சோக்சி, தன்னை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கூடாது என அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். ஆனால், ‘இந்தியச் சிறைகளில் துன்புறுத்தப்படுவேன்’ என்ற அவரது வாதத்தை நிராகரித்த பெல்ஜியம் நீதிமன்றம், கடந்த 18ம் தேதி அவரது இறுதி மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கப் பச்சைக் கொடி காட்டியது.

இந்நிலையில், மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மெகுல் சோக்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த புதிய மனுவில், தீவிர மோசடி விசாரணை அலுவலகம் ஏற்கனவே விசாரித்து வருவதால், அமலாக்கத்துறை தன்னைத் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கக் கூடாது எனக் கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஏ.வி.குஜராத்தி, ‘வேறு அமைப்புகள் விசாரிப்பது அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்குத் தடையாக இருக்காது’ என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும் அமலாக்கத்துறை தரப்பில், ‘வழக்கை இழுத்தடிக்கவே சோக்சி இதுபோன்று மனு செய்கிறார், அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானால் மட்டுமே நடவடிக்கைகள் நிறுத்தப்படும்’ என்று வாதிடப்பட்டது. அடுத்தடுத்து இரு நீதிமன்றங்களிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் மெகுல் சோக்சி விரைவில் இந்தியா கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: