நிலக்கோட்டை, டிச.24: நிலக்கோட்டை அருகே வேளாண் தொழிட்நுட்ப கல்லூரி மாணவிகள் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கப்பட்டன. நிலக்கோட்டை அருகே உள்ள மைக்கல்பாளையத்தில், தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் குள்ளபுரம் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் சார்பில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாணவி ஹர்சிந்தா தலைமை வகித்தார்.
நிலக்கோட்டை வட்டார வேளாண் உதவி அலுவலர் சகாயமேரி முன்னிலை வகித்தார். மாணவி ஹேமபிரியா வரவேற்றார். நிகழ்ச்சியில் மானாவாரி பயிர்கள் மட்டுமே செய்யப்படும் வறட்சியான மைக்கேல்பாளையம் பகுதியில் தொடர் மழை மற்றும் இதமான காலநிலையை பயன்படுத்தி அதிகளவிலான மரக்கன்றுகளை நடும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மா, கொய்யா, வேம்பு, புளி, பலா, நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகளை வழங்கினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாணவி வர்சா நன்றி கூறினார்.
