- தில்லி
- மும்பை
- கொல்கத்தா
- ஹைதெராபாத்
- காஷ்மீர்
- வங்காளம்
- புது தில்லி
- ஷெரீஃப் உஸ்மான் ஹாடி
- தீபு சந்திர தாஸ்
புதுடெல்லி: வங்கதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில், 25 வயது இந்து வாலிபர் தீபு சந்திர தாஸ் கடந்த 18ம் தேதி வன்முறை கும்பலால் அடித்து எரித்து கொல்லப்பட்டார். இந்தியாவுக்கு எதிரான போராட்டத்தை வங்கதேச இடைக்கால அரசே தூண்டிவிடுகிறது. இந்நிலையில், வங்கதேசத்தில் இந்து வாலிபர் கொலைக்கு நியாயம் கேட்டு விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் ஆகிய இந்து அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் டெல்லியில் நேற்று வங்கதேச தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
இதையொட்டி, வங்கதேச தூதரகத்தை சுற்றி 15,000 போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர். தடுப்புகளும், மாநகர பஸ்களும் நிறுத்தப்பட்டு தூதரகத்தை யாரும் நெருங்காத அளவுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் வங்கதேசத்திற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி கோஷமிட்டபடி, அனுமன் மந்திரங்களை முழங்கியபடி தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்த போது, தடுப்புகளை தாண்டி முன்னேற முயன்றதால் போலீசாருக்கும் இந்து அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. இதே போல, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ‘பங்கியோ இந்து ஜாகரன்’ என்ற அமைப்பினர் வங்கதேச தூதரகம் நோக்கி பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த பேரணி சீல்டாவில் தொடங்கி வங்கதேச துணைத் தூதரக அலுவலகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, பெக்பாகன் பகுதியில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
ஆனாலும் சிலர் தடையை தாண்டி செல்ல முயன்றதால் லேசான தடியடி நடத்தப்பட்டது. இதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ், போராட்டக்காரர்கள் தரப்பில் பலர் சிறுகாயமடைந்தனர். வங்கதேச துணைத் தூதரக அலுவலகம் அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஐதராபாத்தில் கொதபேட் பகுதியில் விஎச்பி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து நபர் கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக அவர்கள் எச்சரித்தனர். மும்பையில் வங்கதேச துணை தூதரக அலுவலகத்திற்கு முன்பாகவும் மும்பை மாநகராட்சி அலுவலகம் முன்பாகவும் விஎச்பி மற்றும் பஜ்ரங் தளத்தின் காவி கொடியுடன் போராட்டம் நடத்தினர். காஷ்மீரில் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது.
அதில், சட்டவிரோத வங்கதேச மற்றும் ரோஹிங்யா குடியேறிகளை ஜம்முவிலிருந்து வெளியேற்ற வேண்டும், இந்துக்களை பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என கோஷமிட்டனர். ஜம்முவின் ராணி பார்க் பகுதியில் சிவசேனா டோக்ரா அமைப்பினரும், ரஜௌரி மாவட்டத்தில் விஎச்பி, பஜ்ரங் தள் அமைப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் உருவபொம்மையை எரித்தனர்.
*இந்திய தூதருக்கு வங்கதேசம் சம்மன்
இந்தியாவில் வங்கதேசத்திற்கு எதிரான போராட்டங்களால் அந்நாட்டின் தூதரகங்களின் பாதுகாப்பு கவலைகள் தொடர்பாக டாக்காவில் உள்ள இந்திய தூதரருக்கு வங்கதேச வெளியுறவு அமைச்சகம் நேற்று சம்மன் விடுத்தது. அதைத் தொடர்ந்து வங்கதேசத்திற்கான இந்திய தூதர் பிரணாய் வர்மா, வங்கதேச வெளியுறவு அமைச்சர் ஆசாத் ஆலம் சியாமை சந்தித்தார். அப்போது அவரிடம் வங்கதேச தூதரங்களின் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டது. கடந்த 10 நாட்களில் இந்திய தூதருக்கு விடுக்கப்பட்ட 2வது சம்மன் இது என்பது குறிப்பிடத்தக்கது.
* ஐநா கவலை
வங்கதேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள், குறிப்பாக இந்து வாலிபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார். குட்டெரெசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில், ‘‘வங்கதேச வன்முறை குறித்து ஐநா பொதுச் செயலாளர் மிகவும் கவலை கொண்டுள்ளார். வங்கதேசமாக இருந்தாலும், வேறு எந்த நாடாக இருந்தாலும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு முக்கியம். அதை வங்கதேச அரசு உறுதி செய்யும் என நம்புகிறோம்’’ என்றார்.
* வங்கதேசத்தில் ஊடகங்கள் வாழும் உரிமைக்கு ஆபத்து
வங்கதேசத்தில் கடந்த 18ம் தேதி நடந்த வன்முறையின் போது, டாக்காவில் உள்ள புரோதோம் அலோ மற்றும் தி டெய்லி ஸ்டார் ஆகிய பத்திரிகை அலுவலங்களை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர். அதில் பல பத்திரிகையாளர்கள் ஊழியர்கள் பல மணி நேரம் சிக்கி உயிருக்கு போராடினர். தீயை அணைக்க வந்த போலீசாரையும், தீயணைப்பு வீரர்களையும் வன்முறை கும்பல் சிறிது நேரம் தடுத்து வைத்திருந்தது.
இது குறித்து மூத்த அரசியல்வாதிகள், ஊடக உரிமையாளர்கள் நேற்று பங்கேற்ற கூட்டத்தில் பேசிய டெய்லி ஸ்டார் பத்திரிகையின் ஆசிரியரும், வெளியீட்டாளருமான மஹ்புல் அனாம், ‘‘கருத்து சுதந்திரம் இனி முக்கிய பிரச்னையல்ல. இப்போது ஊடகங்கள் உயிர் வாழும் உரிமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
