வத்தலக்குண்டு, டிச.23: வத்தலக்குண்டுவில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். வத்தலகுண்டு பிலீஸ் புரத்தை சேர்ந்தவர் குருநாதர் (23). இவர்பெரியகுளம் சாலையில் ஒரு கடை முன்பு நின்றிருந்தபோது அங்கு வந்த 2 பேர் அவசரமாக ஒரு போன் செய்ய வேண்டும். உங்கள் செல்போனை கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். இதனையடுத்து குருநாதர் தனது செல்போனை கொடுத்துள்ளார். அப்போது 2 பேரும் செல்போனுடன் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இது குறித்து வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில் வத்தலக்குண்டு காந்தி நகரை சேர்ந்த ராஜேஷ்(38) மற்றும் விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த கணேசன்(38) ஆகியோர் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதானவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
