ராமேஸ்வரம் பகுதியில் வெல்டிங் பட்டறையை உடைத்து திருட்டு

ராமேஸ்வரம், டிச.17: வெல்டிங் பட்டறையை உடைத்து திருட்டு நடந்தது பற்றி, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரம் துறைமுக கடற்கரை அந்தோணியார் கோயில் அருகே ஆரோக்கியசாமி என்பவரின் லேத் பட்டறை உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு லேத் மேல்கூரையின் சிமெண்ட சீட்டை உடைத்து மர்ம நபர் உள்ளே இறங்கி பொருட்களை திருடிச் சென்றுள்ளார். வழக்கம்போல் காலையில் கடையை திறந்த ஆரோக்கியசாமி மேல்கூரை உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் பட்டறையை சோதனை செய்து பார்த்தபோது பூட்டி வைக்கப்பட்டிருந்த பெரிய பெட்டியை உடைத்து அதிலிருந்த சுமார் 30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பின் திருட்டுச் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஜெட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இதே பகுதியில் விண்ணரசன் என்பவரின் கடையை உடைத்து சுமார் 5 லட்சம் மதிப்பிலான ஜிபிஎஸ் கருவிகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

மேலும் தொடர்ந்து ராமேஸ்வரம் துறைமுகத்தில் கரையில் ஏற்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளில் உள்ள பித்தளை பாகங்களை இரவு நேரத்தில் சமூக விரோதிகள் திருடிச்செல்லும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்து வருவதாக படகு உரிமையாளர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது பட்டறையை உடைத்து திருடிய சம்பவம் அப்பகுதி கடைக்காரர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போலீசார் துறைமுக கடற்கரை பகுதியில் இரவுநேர ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: