புதுடெல்லி: அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் 3 நாள் இந்திய சுற்றுப்பயணம் டெல்லியில் நேற்று வெகு சிறப்பாக முடிவுக்கு வந்தது. கடந்த 2022ல் கத்தாரில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கால்பந்து வெகுவாக ஆடப்படும் நாடுகளுக்கு, ‘கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (கோட்) என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் லியோனல் மெஸ்ஸி, இந்தியாவில் கடந்த 13ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
முதற்கட்டமாக கொல்கத்தாவில் சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சி, ஏற்பாட்டாளர்களின் குளறுபடிகளால் பெரும் வன்முறையில் முடிந்தது. வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே அங்கு இருந்த அவர், பின், ஐதராபாத் சென்று, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்தார். சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
அதன் பின் மும்பை சென்ற அவர், நேற்று டெல்லியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மெஸ்ஸி சென்ற இடங்களில் எல்லாம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜெர்சி ஆடையை அணிந்து வந்து பெருந்திரளாய், அவரை பார்த்து சென்றனர். மெஸ்ஸி மைதான மேடைகளில் தோன்றி நின்றபோது, ரசிகர்கள், அவர் பெயரை உரக்க சொல்லி பூரிப்படைந்தனர். அவர்களை பார்த்து கைகளை அசைத்த மெஸ்ஸி, ரசிகர்களின் கரகோஷங்களையும் வாழ்த்துகளையும் ஏற்று, ஸ்பானிஷ் மொழியில், ‘கிரேஸியாஸ் டெல்லி, ஹஸ்தா ப்ரோன்டா’ (டெல்லிக்கு நன்றி! சென்று வருகிறேன்) என்று கூறி நன்றி தெரிவித்தார். அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, 25,000 ரசிகர்கள் வந்திருந்தனர்.
அப்போது, தான் கேப்டனாக உள்ள இன்டர் மயாமி கால்பந்து அணியை சேர்ந்த லூயிஸ் சுவரெஸ், ரோட்ரிகோ டி பால் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுடன் சேர்ந்து, தனது ரசிகர்களுக்காக சிறிது நேரம், மெஸ்ஸி கால்பந்தாட்டம் ஆடி அவர்களை மகிழ்வித்தார். டெல்லி முதல்வர் ரேகா குப்தா, ஐசிசி தலைவர் ஜெய் ஷா, இந்திய முன்னாள் கால்பந்து அணி தலைவர் பைச்சுங் பூட்டியா உள்ளிட்ட பல பிரபலங்கள், மெஸ்ஸியை சந்தித்து அவருக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.
