×

100 நாள் வேலை திட்டம் ‘விபி ஜி ராம் ஜி’ என பெயர் மாற்றம்; மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு நெருக்கடி: ஒன்றிய அரசின் புதிய மசோதாவால் பரபரப்பு

புதுடெல்லி: 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் பெயரை தூக்கிய மோடி அரசு, அதற்கு பதில் வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம்(விபி ஜி ராம் ஜி) என பெயரை மாற்றியுள்ளது. மேலும் மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2005ஆம் ஆண்டு, கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டில் 100 நாட்கள் வேலை கிடைப்பதை உறுதி செய்ய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு மாற்றாக ‘ வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம் (கிராமப்புறம்) ‘ என்ற திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு கடந்த 12ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்த நிலையில் விபி ஜி ராம் ஜி என்று பெயரிடப்பட்ட அந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

விபி ஜி ராம் ஜி மசோதாவில் 100 நாட்களுக்கு பதில் இனிமேல் 125 நாட்கள் ஊதிய வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த மசோதாவின் புதிய அம்சங்கள் வருமாறு:

  • கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள வயது வந்த உறுப்பினர்கள் திறமையற்ற உடல் உழைப்புப் பணிகளைச் செய்ய முன்வந்தால், அவர்களுக்கு ஒவ்வொரு நிதியாண்டிலும் 125 நாட்களுக்கு ஊதிய வேலைவாய்ப்புக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும்.
  • இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து 6 மாதங்களுக்குள், மாநிலங்கள் புதிய சட்டத்தின் விதிகளுக்கு இணங்க ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்.
  • ஒன்றிய அரசின் நிதியுதவி பெறும் இந்த திட்டத்தின் கீழ், இனிமேல் நிதிப் பொறுப்பு என்பது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படும்.
  • இது வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இமயமலை மாநிலங்களுக்கு 90:10 என்ற விகிதத்திலும், மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 60:40 என்ற விகிதத்திலும் இருக்கும். சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு, முழுச் செலவையும் ஒன்றிய அரசே ஏற்கும்.
  • ஒவ்வொரு நிதியாண்டிற்கும் மாநில வாரியான ஒதுக்கீட்டை ஒன்றிய அரசே நிர்ணயிக்கும். ஒரு மாநிலம் செய்யும் கூடுதல் செலவினங்களை அந்த மாநில அரசே ஏற்க வேண்டும்.
  • ஊதிய விகிதம் ஒன்றிய அரசால் ஒரு அறிவிக்கை மூலம் குறிப்பிடப்படும். இது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள ஊதிய விகிதங்களை விடக் குறைவாக இருக்கக்கூடாது.
  • ஒன்றிய அரசால் ஊதிய விகிதம் அறிவிக்கப்படும் வரை, புதிய சட்டத்தின் கீழ் வரும் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் ஊதிய விகிதங்களே தொடர்ந்து பொருந்தும்.
  • ஒரு விண்ணப்பதாரருக்கு 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்படாவிட்டால், வேலையின்மைப் படி வழங்கப்படும். இந்தத் தொகையை மாநில அரசே செலுத்த வேண்டும். இந்தத் தொகை, நிதியாண்டின் முதல் 30 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் கால் பகுதிக்கும் குறைவாகவும், நிதியாண்டின் மீதமுள்ள காலத்திற்கு ஊதிய விகிதத்தில் பாதிக்கும் குறைவாகவும் இருக்கக்கூடாது.
  • விதைப்பு மற்றும் அறுவடை போன்ற உச்ச விவசாயப் பருவங்களை உள்ளடக்கிய ஒரு காலத்தை மாநில அரசு அறிவிக்கும். அந்தக் காலத்தில் இந்தச் சட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படாது. இதுதொடர்பான நாட்களை 60 நாட்களுக்கு முன்பு ஒன்றிய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 100 சதவீதம் ஒன்றிய அரசால் நிதியுதவி செய்யப்படும் திட்டமாக இருந்தது. மேலும் தேவைக்கேற்ப செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாக இருந்தது. அதாவது, வேலைக்கான தேவை இருந்தால், ஒன்றிய அரசு அதிக நிதியை ஒதுக்கீடு செய்வது கட்டாயமாகும். ஆனால், முன்மொழியப்பட்ட திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நிதியாண்டிற்கும் மாநில வாரியான ஒதுக்கீட்டை ஒன்றிய அரசே நிர்ணயிக்கும். ஒரு மாநிலம் செய்யும் கூடுதல் செலவினங்களை அந்த மாநில அரசே ஏற்க வேண்டும் என்பதால் ஊரக வேலை உறுதி திட்டம் முழுவதும் மாநில அரசுகளுக்கு கடும் நிதி நெருக்கடி கொடுக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று தாக்கல்?
மக்களவையில் நேற்று 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மசோதா மட்டும் அறிமுகப்படுத்தப்படவில்லை. ஆனால் பழைய மசோதாவில் மகாத்மா காந்தி பெயரை நீக்குவதற்கும், மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை அதிகரிப்பதற்கும் பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இன்று இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊழியர்களுக்கும் கெடுபிடி: பயோமெட்ரிக் பதிவு, செல்போன் மூலம் கண்காணிப்பு
ஒன்றிய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில்,’ கடந்த 20 ஆண்டுகளாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கிராமப்புறக் குடும்பங்களுக்கு உத்தரவாதமான ஊதிய வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. இருப்பினும், கிராமப்புறத்தில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க சமூக-பொருளாதார மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, இந்த திட்டத்தை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகிவிட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துதல் என்ற இலக்கில் கவனம் செலுத்திய நிலையில், புதிய மசோதா வளமான மற்றும் மீள்திறன் கொண்ட கிராமப்புற இந்தியாவிற்காக அதிகாரமளித்தல், வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் முழுமையான செயலாக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பணி நிலைகளில் பயோமெட்ரிக் அங்கீகாரம், மொபைல் அடிப்படையிலான பணியிடக் கண்காணிப்பு, நிகழ்நேர மேலாண்மைத் தகவல் அமைப்பு டாஷ்போர்டுகள், திட்டமிடல், தணிக்கைகள் மற்றும் மோசடி இடர் தணிப்புக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட ஒரு விரிவான டிஜிட்டல் சூழலமைப்பு, பொறுப்புக்கூறல் மற்றும் குடிமக்கள் ஈடுபாட்டை நவீனமயமாக்கப் பயன்படுத்தப்படும்’ என்று தெரிவித்தார். இதன் மூலம் 125 நாள் வேலை திட்டத்தில் ஊழியர்களுக்கும் கூடுதல் கெடுபிடிகள் உறுதி என்பது தெரிய வந்துள்ளது.

எந்த பணிகள் செய்யலாம்?
புதிய சட்டம் நான்கு முக்கிய வகையான பணிகளில் கவனம் செலுத்துகிறது.
1 நீர் பாதுகாப்பு (பாதுகாப்பு, நீர்ப்பாசனம், நீர்நிலைகளைப் புனரமைத்தல், காடு வளர்ப்பு போன்றவை)
2முக்கிய கிராமப்புற உள்கட்டமைப்பு (கிராமப்புறச் சாலைகள், பஞ்சாயத்து பவன்கள், அங்கன்வாடி போன்றவற்றை நிர்மாணித்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள்).
3வாழ்வாதாரம் தொடர்பான உள்கட்டமைப்பு உருவாக்கம் (பயிற்சி மையங்கள், கிராமப்புறச் சந்தைகள், தானியக் கிடங்குகள் போன்ற கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான சொத்துக்களை உருவாக்குதல்)
4காலநிலை தொடர்பான பணிகள் (பேரிடர் இடர் குறைப்பு, காலநிலை தொடர்பான நடவடிக்கைகள்).

காந்தி பெயரை நீக்கியது ஏன்?
கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவரான காங்கிரஸ் எம்பி சப்தகிரி உலாக்கா அளித்த பேட்டியில், ‘‘பாஜ ஆட்சிக்கு வந்த போது பிரதமர் மோடி இந்த திட்டத்தை குழி தோண்டும் திட்டம் என்றார். இது காங்கிரசின் திட்டம் என்பதால் அதை முடிவுக்கு கொண்டு வரப்பார்க்கின்றனர். காந்தியின் பெயரில் என்ன பிரச்னை இருக்கிறது என்று தெரியவில்லை’’ என்றார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன் கூறுகையில், ‘‘மகாத்மா காந்தியை கொன்றவரை ஹீரோவாக வழிபட்டவர்கள் தான் இவர்கள். இப்போது காந்தியை அவமானப்படுத்தி, அவரை வரலாற்றிலிருந்து அகற்ற விரும்பகிறார்கள்’’ என்றார்.

காப்பீட்டு துறையில் 100% அந்நிய முதலீடு
வரும் 2047ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் காப்பீடு வழங்கும் நோக்கத்துடன், காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதா இந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

Tags : Union Government ,New Delhi ,Modi government ,
× RELATED உதய்பூரில் ரூ.30 கோடி மோசடி செய்த...