புதுடெல்லி: கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய ஒன்றிய பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வின் போது, முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவணே எழுதிய புத்தகத்தின் சில பகுதிகள் வெளிப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதனிடையே கடந்த பிப். 28ம் தேதியன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானியத் தலைவர் கொல்லப்பட்டதற்கு ஒன்றிய அரசு மவுனம் காப்பது மற்றும் நடுக்கடலில் சிக்கியுள்ள ரஷ்ய கச்சா எண்ணெயை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கொள்முதல் செய்ய அமெரிக்க கருவூலத் துறை தற்காலிக அனுமதி வழங்கியது மற்றும் அமெரிக்காவிடமிருந்து இந்தியா அதிகப்படியான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளிட்ட நிபந்தனைகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த சூழலில் , பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று மீண்டும் தொடங்கியது. மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மக்களவை தலைவர் ஓம் பிர்லாவை பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை முன்மொழிவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மாநிலங்களவை தொடங்கியதும் அவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இரங்கல் குறிப்புக்களை வாசித்து பட்டியலிடப்பட்ட ஆவணங்களை வெளியிட அனுமதித்தார். பின்னர் மேற்கு ஆசியா குறித்து அறிக்கை வெளியிட ஜெய்சங்கரை அவர் கேட்டுக்கொண்டார். எனினும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அறிக்கை வெளியிடுவதற்கு முன்னதாக அது குறித்து விவாதிக்க வேண்டும் என்றார். ஆனால் அவை தலைவர், கார்கேவிடம் பின்னர் வருவதாக கூறி அமைச்சர் அறிக்கையை வெளியிட அனுமதி அளித்தார். அறிக்கை வெளியிடத் தொடங்கியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுந்து நின்று முழக்கமிட்டனர்.
அவையில் காங்கிரஸ் தலைவர் கார்கே பேச அனுமதித்து பின்னர் அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறி அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்து விவாதம் நடத்தக்கோரி அமளியில் ஈடுபட்டனர். உறுப்பினர்கள் தங்களது இருக்கைகளுக்கு திரும்பும்படி சபாநாயகர் இருக்கையில் இருந்த ஜெகதாம்பிகா பால் கேட்டுக்கொண்டார். ஆனால் எதிர்க்கட்சிகள் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து கூச்சலிட்டதால் அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் கூடியபோதும் அமளி நிலவியதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தாமாக முன்வந்து ஒரே மாதிரியாக தாக்கல் செய்த அறிக்கையில், ”பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பேணுவதற்கு புதுடெல்லி உறுதிபூண்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட்ட சரியான முடிவினால் ஈரான் கப்பல் இந்திய துறைமுகத்தில் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
மோதலால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் சிக்கி தவித்த 67000 இந்தியர்கள் ஏற்கனவே மீட்கப்பட்டனர். இந்தியா அமைதியை ஆதரிக்கிறது. பதற்றத்தை குறைத்தல், கட்டுப்பாடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை ஆதரிக்கிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
* பிரதமர் மோடியை அம்பலப்படுத்தும்
நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, ” எரிபொருள் விலை, பொருளாதார பேரழிவு போன்றவை மக்கள் பிரச்னைகள். இது குறித்து விவாதிக்க கோருகிறோம். நரேந்திர மோடி மிரட்டப்பட்டாரா., சமரசம் செய்யப்பட்டாரா என்று கேள்விகள் எழும். அதனால் தான் அவர் நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார்” என்றார்.
* எதிர்க்கட்சிகள் போராட்டம்
மேற்கு ஆசிய மோதல் குறித்து விவாதிக்கக் கோரியும் அது தொடர்பான முக்கியமான பிரச்னைகளில் அரசு மவுனம் காப்பதற்காகவும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
* சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் இன்று விவாதம் நடத்த திட்டம்
வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கமளித்துள்ளதால், அது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அரசு ஏற்பதற்கு வாய்ப்பு இல்லை. இந்நிலையில் இன்று சபாநாயகர் ஒம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதத்தை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
