×

கரூர் நெரிசலில் 41 பேர் நசுங்கி உயிரிழந்த விவகாரம்: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஜய் இன்று நேரில் ஆஜராக சம்மன்

 

* கூட்டணிக்காக தொடர் நெருக்கடி கொடுப்பதாக பாஜ மீது புகார்
* 15 நாளைக்கு பிறகு சென்னை மண்டல அலுவலகத்தில் விசாரணை நடத்த தவெக கோரிக்கை

புதுடெல்லி: கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணிக்காக தொடர் நெருக்கடி கொடுப்பதாக தவெகவினர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் 15 நாட்களுக்குப் பிறகு சென்னையில் வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தவெக தலைவரான நடிகர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அவர் அன்று மாலை 3 மணிக்கு வர வேண்டிய கூட்டத்திற்கு 4 மணி நேரம் காலதாமதமாக தனது பிரசார வாகனத்துடன் பெரும் கூட்டத்தில் நுழைந்து பேசினார். நடிகர் விஜய்யை பார்க்க காலை 12 மணியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் காத்திருந்தனர். நடிகர் விஜய் கூட்டத்திற்குள் நுழைந்ததும் அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக கரூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக கரூரில் முகாமிட்டு உயிரிழந்த குடும்ப உறுப்பினர்கள், கூட்ட நெரிசலில் சிக்கிய காயமடைந்தவர்கள், நடிகர் விஜய் பிரசார வாகன ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர்.

அதே நேரம் இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஐபிஎஸ் அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் கண்காணித்து வருகின்றனர். இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்டை பொதுச் செயலாளர் அதவ் அர்ஜூனா, இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது, நெரிசல் விபத்து தொடர்பாக அவர்களிடம் தனித்தனியாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், நடிகர் விஜய் பிரசார கூட்டத்திற்கு, கட்சியின் சார்பில் செய்த பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன? நடிகர் விஜய் எப்போது கூட்டத்திற்கு வந்தார். நெரிசல் ஏற்பட்ட போது அவசர அவசரமாக சம்பவ இடத்தில் இருந்து ஏன் சென்றீர்கள். பாதிக்கப்பட்டவர்களை கட்சியின் சார்பில் ஏன் மீட்கப்படவில்லை உள்ளிட்ட கேள்விகளை கேட்டு அவர்கள் அளித்த பதிலை வாக்குமூலம் பெற்றனர்.

அதேநேரம், சிபிஐ அதிகாரிகள் நடிகர் விஜய் நடத்தும் ஒவ்வொரு கூட்டத்திற்கு தேவையான பணம் எங்கிந்து வருகிறது. உயிரிழந்த குடும்பத்திற்கு கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது. நடிகர் விஜய் செலவு செய்கிறாரா அல்லது கட்சியின் நிர்வாகிகளான ஆதவ் அர்ஜூனா மற்றும் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோர் செய்கிறாரா என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர்கள் கட்சியின் பொதுக்கூட்டம் மற்றும் பிரசாரத்திற்கு தேவையான பணம், கட்சியின் தலைவரான நடிகர் விஜய் மற்றும் விஜய்யின் அரசியல் ஆலோசகரான திருச்சியை சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி தான் ஏற்பாடுகளையும் செய்து வருவதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து நடிகர் விஜய்யை, சிபிஐ அதிகாரிகள் கடந்த ஜனவரி 12ம் தேதி டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், சிபிஐ அதிகாரிகள், நடிகர் விஜய்யிடம் கரூர் கூட்டத்திற்கு காலதாமதமாக வர யார் ஆலோசனை கொடுத்து வழிநடத்தியது என்று கேட்டனர். அதற்கு விஜய், எனது அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கிய சாமி தான் அனைத்து யோசனைகளும் கொடுத்தார். அவர் கூறியபடி தான் நான் கட்சி கூட்டங்களில் பேசுவது, கலந்து கொள்வது எல்லாம் என்று கூறியதாக கூறப்படுகிறது. பிறகு சிபிஐ அதிகாரிகள் சில ஆவணங்களுடன் ஜனவரி 19ம் தேதி மீண்டும் 2வது முறையாக நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவித்து அனுப்பினர்.

பின்னர் சிபிஐ அதிகாரிகள் முன் நடிகர் விஜய் கடந்த ஜனவரி 19ம் தேதி நேரில் ஆஜரானார். அப்போது முந்தைய விசாரணையில் கேட்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்தார். ஆனால் அந்த ஆவணங்களில் பணம் வரவு தொடர்பாக எந்த விவரங்களும் அளிக்கவில்லை. இதனால் சிபிஐ அதிகாரிகள், நடிகர் விஜய்யிடம் மாநாடு ஏற்பாடுக்கான பணம் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் பெறப்பட்டதா? அதற்கான ஆதாரங்கள் எங்கே? சட்டவிரோதமாக பல கோடி ரூபாய் மாநாடுகளுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான எந்த விளக்கமும் நீங்கள் அளிக்கவில்லை. வருமான வரித்துறையிலும் நீங்கள் மாநாட்டுக்கான செலவு கணக்குகளை முறையாக காட்டவில்லை என அடுக்கடுக்கான கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் கேட்டனர். அப்போது மீண்டும் வரவு செலவு கணக்கு விவரங்களை அளிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று சிபிஐ அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால், ஒன்றரை மாதங்கள் கடந்தும் சிபிஐ அதிகாரிகள் கேட்ட ஆவணங்களை தவெக தலைவர் விஜய் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே மாநாடு உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகளுக்கு பல நூறு கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது.
அந்த செலவுக்கு பணம் எங்கிருந்து வந்தது. செலவுக்கான பணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனே அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் பணம் செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களை தேசிய புலனாய்வு முகமைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சிபிஐ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த ஜனவரி 19ம் தேதி விசாரணையின் போது உறுதி அளித்தபடி வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் கட்சி பணிக்கான பணம் வரவு குறித்த ஆவணங்களுடன் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ அதிகாரிகள் தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு சம்மன் அனுப்பியுள்ளனர். அந்த சம்மன் சென்னை மண்டல சிபிஐ அதிகாரிகள் சார்பில் நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீடு மற்றும் பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்மனை தொடர்ந்து நடிகர் விஜய் இன்று டெல்லி விரைந்து சென்று சிபிஐ விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராவார் என்று கூறப்படுகிறது. அதேநேரம் நடிகர் விஜய் தனது கட்சியின் வேட்பாளர் நேர்காணல் இன்று கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் இன்று நடக்கிறது. இதனால் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு நடிகர் விஜய் செல்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

அதேநேரம் தவெக தலைவர் நடிகர் விஜய் சார்பில் சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு தனது வழக்கறிஞர்கள் மூலம் கோரிக்கை கடிதம் வழங்கியதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சி பணிகள் மற்றும் ஏற்கனவே திட்டமிட்ட வேட்பாளர் நேர்காணல் பணி இன்று இருப்பதால், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக 15 நாள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு பதில் சென்னையில் உள்ள சிபிஐ மண்டல அலுவலகத்தில் வரும் நாட்களில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் வகையில் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நடிகர் விஜய் சினிமா பிரபலம் என்பதால் சென்னையில் உள்ள மண்டல அலுவலகத்தில் ஆஜரானால், அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினர் அதிகளவில் சிபிஐ அலுவலகம் முன்பு கூடுவார்கள்,

இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என சிபிஐ அதிகாரிகள் கருதுகின்றனர். டெல்லி அலுவலகத்தில் நடிகர் விஜய் ஆஜராகும் போது சென்னையில் இருந்து ரயில் மற்றும் விமானம் மூலம் தங்களது ஆதரவாளர்களை சிபிஐ அலுவலகம் ஒன்று கூடினார். இதனால் நடிகர் விஜய்யை சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கே விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தவெக தலைவர் நடிகர் விஜய்யை என்டிஏ கூட்டணியில் எப்படியாவது இழுக்க வேண்டும் என்று, பாஜ நேரடியாக சிபிஐ அதிகாரிகள் மூலம் நடிகர் விஜய்க்கு அழுத்தம் அளிக்கப்படுவதாக தவெக தலைவர்கள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். அதற்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்தாலும் டெல்லிக்கு நடிகர் விஜய்யை அழைத்து என்டிஏ கூட்டணியில் சேரும்படி ஆந்திர துணை முதல்வர் மூலம் சில திரைமறைவு வேலைகளில் பாஜ தலைவர்கள் ஈடுபட்டு வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Karur ,Vijay ,Delhi ,CBI ,BJP ,Chennai ,New Delhi ,Delhi… ,
× RELATED மம்தாவுக்கு தண்ணி காட்டிய பா.ஜ