- புது தில்லி
- ஈரான்
- இஸ்ரேல்
- எங்களுக்கு
- ஹார்முஸ் ஜலசந்தி
- சவூதி அரேபியா
- ஈராக்
- குவைத்
- கத்தார்
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ்…
புதுடெல்லி: ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையே போர் தீவிரம் அடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஹார்முஸ் நீரிணையை ஈரான் கடந்த 2ம் தேதி மூடி விட்டது. இந்த வழியாகத்தான் சவூதி அரேபியா, ஈராக், குவைத், கத்தார், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஈரான் ஆகியவற்றில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டுவரப்படுகிறது.
இந்தியா, சீனா , ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு 80 சதவீத கச்சா எண்ணெய் இந்த வழியாகத்தான் வர வேண்டும். இதுபோல், உலக பயன்பாட்டில் சுமார் 30 சதவீதம் திரவ எரிவாயுவும் இந்த வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகிறது. இதனால், கச்சா எண்ணெய் சப்ளை தடை பட்டு, தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக, சர்வதேச சந்தையில் ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் ஸ்பாட் விலை நேற்று அதிகபட்சமாக 119 டாலர் வரை சென்றது. இது 4 ஆண்டுகளில் இல்லாத உச்சமாகும். இதற்கு முன்பு 2022ம் ஆண்டு ஜூன் மாதத்தில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியபோது, ஒரு பேரல் கச்சா எண்ணெய் 127 டாலரானது.
சர்வதேச சந்தையில் ஸ்பாட் விலையில் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை நேற்றிரவு சற்று குறைந்தாலும் பெரும்பாலும் 100 டாலருக்கு மேல் தான் வர்த்தகமானது. இதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கச்சா எண்ணெய் இருப்பு 25 நாட்களுக்கும், பெட்ரோல் டீசல் இருப்பு 25 நாட்களுக்கும் என 50 நாள் சமாளிக்க முடியும் என ஒன்றிய அரசு வட்டாரங்கள் கடந்த வாரம் அறிவித்திருந்தன.
இருப்பினும், ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டால் மட்டுமே சப்ளை தடையின்றி நடக்கும். ஒரு சில வாரங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட ஈரான் போர், மேலும் பல மாதங்கள் நீடிக்கும் அளவுக்கு போர் மேகங்கள் தீவிரமடைந்துள்ளன. இது, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மட்டுமின்றி, பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
