- ஷேக் ஹசினா
- இந்தியா
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- வங்காளதேச அரசு
- புது தில்லி
- வங்காளம்
- வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
- தூதர்
- பிரணய் வர்மா
புதுடெல்லி: வங்கதேசத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் தங்கள் நாடு பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. அண்டை நாடான வங்கதேசத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தியத் தூதர் பிரனய் வர்மாவை நேரில் அழைத்துத் தனது கவலையைத் தெரிவித்தது. குறிப்பாக, இந்தியாவில் தங்கியுள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் தடை செய்யப்பட்ட அவாமி லீக் கட்சியினர், வங்கதேசத்திற்கு எதிராகத் தூண்டுதல் பேச்சுக்களிலும், பயங்கரவாதச் சதித்திட்டங்களிலும் ஈடுபடுவதாகப் புகார் கூறியது. மேலும், ‘தேர்தலைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படும் ஷேக் ஹசீனாவையும், அவரது முன்னாள் அமைச்சரையும் நாடு கடத்த வேண்டும்; அரசியல் தலைவர் ஷெரீப் உஸ்மான் மீதான கொலை முயற்சி வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய உதவ வேண்டும்’ என்றும் அந்தச் சந்திப்பின் போது வங்கதேச அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், வங்கதேச அரசின் இந்தக் குற்றச்சாட்டுகளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வன்மையாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நட்பு நாடான வங்கதேசத்தின் நலனுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு இந்திய மண்ணை ஒருபோதும் பயன்படுத்த அனுமதித்ததில்லை’ என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கதேசத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் இந்தியத் தூதர் உறுதி அளித்துள்ளார். அதேவேளையில், உள்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது இடைக்கால அரசின் கடமை என்பதையும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.
