×

டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசம் காணொலி விசாரணை பயன்படுத்துங்க! சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி பரிந்துரை

 

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர்கள் காணொலி வாயிலாக நீதிமன்ற விசாரணையில் பங்கேற்கலாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து மக்கள் சுவாசிக்கவே முடியாத நிலைக்குச் சென்றுள்ளது. இந்த நச்சுக்காற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக ஏற்கனவே கவலை தெரிவித்திருந்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ். நரசிம்மா, ‘இந்த மாசுக் காற்று நிரந்தர உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது’ என்று எச்சரித்திருந்தார்.

எனவே, வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் வருவதைத் தவிர்த்துவிட்டு இணையவழி விசாரணையைத் தேர்வு செய்யுமாறு அவர் முன்பே அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில், தற்போது காற்றின் தரம் ‘கடுமையான’ பிரிவை எட்டியுள்ளதால், உச்ச நீதிமன்றப் பதிவுத்துறை அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர்களுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், நீதிமன்றத்திற்கு நேரில் வருவதைக் குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்துத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தீவிர கவலை தெரிவித்துள்ளதோடு, ‘நச்சுக்காற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, காணொலி வாயிலாக நடைபெறும் விசாரணையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். இது கட்டாய உத்தரவு இல்லை என்றாலும், தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Delhi ,Supreme Court ,NEW DELHI ,
× RELATED உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4...