சென்னை: பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை மூலம், அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவ-மாணவியருக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம், நிபந்தனைகளின் அடிப்படையில் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவ-மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இளங்கலை (தொழிற்படிப்பு) முதுகலை, பாலிடெக்னிக் போன்ற பிற படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,50,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 2025-2026ம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு மாணவ-மாணவியருக்கு கல்லூரி மூலம் வழங்கப்பட்டுள்ள UMIS எண் மூலம் umis.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
மாணாக்கர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி umis.tn.gov.in என்ற இனையதளத்தின் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணாக்கர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் வருகிற 31ம் தே ஆகும். மேலும், கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
