திண்டுக்கல், டிச. 13: திருக்கார்த்திகை தீப திருநாளையொட்டி திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகை பூ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையானது. திண்டுக்கல்லில் அண்ணா பூ மார்க்கெட் செயல்படுகிறது. இந்த மார்க்கெட்டிற்கு திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இங்கிருந்து ஈரோடு, திருச்சி, சேலம், சென்னை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும். திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளது.
அதே நேரத்தில், இன்று கார்த்திகை தீப திருநாள் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்திருந்தது. இதனால் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 500 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனையானது.
மற்ற பூக்களின் விலை நிலவரம் (கிலோவில்): சம்பங்கி- ரூ.120, ரோஜாப்பூ- ரூ.170, முல்லை பூ- ரூ. 900, ஜாதிபூ- ரூ.650, கனகாம்பரம்- ரூ. 1500, கோழிகொண்டை- ரூ.120, செண்டுமல்லி- ரூ.50, காக்கரட்டான்- ரூ.800, செவ்வந்தி- ரூ.170 முதல் ரூ.200 வரை, வாடாமல்லி- ரூ.60, மரிக்கொழுந்து- ரூ.150, மருகு- ரூ.100, பட்டன் ரோஸ்- ரூ.300, அரளி- ரூ.400, விருச்சி பூ- ரூ.300, தாமரைப்பூ ரூ.30.
