காரைக்குடி, டிச.13: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, சென்னை மாநகர நூலக ஆணைக்குழு, சமூக நீதி கண்காணிப்பு குழு சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நடந்தது. சமூக நீதி கண்காணிப்பு குழு உறுப்பினர் முனைவர் ராஜேந்திரன் வரவேற்றார். துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் ஜி.ரவி தலைமை வகித்து பேசுகையில், கலைஞரின் தனித்தன்மை, கடின உழைப்பு, தோல்வியை கண்டு துவளாத மன உறுதி, ஞாபக சக்தி, தனித்திறமை, பேச்சாற்றல், எழுத்தாற்றல் போன்றவற்றை இன்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
பெரியாரின் சுயமரியாதை கருத்துக்களை மக்களிடையே முழுமையாக கொண்டு சேர்த்தவர் கலைஞர். பெண்களின் முன்னேற்றத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து திறம்பட செயல்படுத்தியவர் கலைஞர். தமிழ்நாட்டின் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர். உயர்கல்வியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த புதிய துறைகள் அவரது காலத்தில் உருவாக்கப்பட்டது. கலைஞரின் குணநலன்களை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றார். சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவர் முனைவர் சுப.வீரபாண்டியன் துவக்கிவைத்து பேசுகையில், கலைஞர் 83 ஆண்டுகள் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர்.
64 ஆண்டுகள் பத்திரிக்கை ஆசிரியராகவும், 49 ஆண்டுகள் ஒரு கட்சிக்கு தலைவராக இருந்தவர். 13 முறை எம்எல்ஏ.வாகவும், 18 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர். தலைசிறந்த இலக்கியவாதியாகவும், திரைப்பட வசனகர்த்தாகவும், பாடலாசிரியராகவும், மேடை பேச்சாளராகவும், சிறந்த எழுத்தாளராகவும் விளங்கியவர். கலைஞர் ஆட்சி காலத்தில் உழவர்சந்தை, டைடல் பார்க், சமத்துவபுரம் துவங்கப்பட்டது என்றார். நிகழ்ச்சியில் பதிவாளர் முனைவர் செந்தில்ராஜன், ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் சேகர், பன்னாட்டு வணிகவியல் துறை உதவிக் பேராசிரியர் கோபால்சாமி, கவிஞர் முத்துநிலவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொலைநிலைகல்வி, கல்வியியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
