கவுகாத்தி: அசாம் மாநிலத்தை சேர்ந்த புகழ்பெற்ற பாடகர் ஜூபின் கார்க். அண்மையில் சிங்கப்பூரில் நடந்த வடகிழக்கு இந்தியா விழாவில் ஜூபின் கார்க் கலந்து கொண்டார். விழாவுக்கு பிறகு நீச்சல் வீரர்கள் ஆழ்கடலில் செய்யும் ஸ்கூபா டைவிங் சாகசத்தில் ஈடுபட்ட அவர் மூச்சு திணறி உயிரிழந்தார். இந்த வழக்கில் வடகிழக்கு இந்தியா விழா ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்தா மற்றும் ஜூபின் கார்க்கின் மேலாளரும், இசையமைப்பாளருமான சித்தார்த் சர்மா, ஜூபினின் நண்பரும், இசைக்கலைஞருமான சேகர் ஜோதி கோஸ்வாமி, இணைப்பாடகர் அமிர்தப்வரா மஹந்தா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜூபின் கார்க்கின் மரணம் குறித்து விசாரிக்க குற்ற புலனாய்வு துறையின்(சிஐடி) இயக்குநர் ஜெனரல் முன்னா பிரசாத் குப்தா தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான அசாம் அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் நேற்று கவுகாத்தி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 3,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையை, ஆதாரங்களுடன், ஒன்பது பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆறு வாகனங்களில், 4 டிரங்க் பெட்டிகளில் கொண்டு வந்தனர். குற்றப்பத்திரிகையில், ஷ்யாம்கானு மஹந்தா, சித்தார்த்த சர்மா, சேகர் ஜோதி கோஸ்வாமி மற்றும் அம்ரித்பிரவா மஹந்தா ஆகிய நான்கு பேர் மீது கொலை குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
