திருப்பரங்குன்றம் விவகாரம்: பா.ஜ எம்பி பேச்சால் மக்களவையில் அமளி; திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு
மதுரை அருகே திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றும் விவகாரத்தை மக்களவையில் பா.ஜ எம்பி அனுராக் தாக்கூர் நேற்று எழுப்பி பேசினார். அப்போது தமிழ்நாடு அரசு நீதிமன்ற அவமதிப்பு செய்ததாகவும், திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டினார். அவரது ேபச்சுக்கு மக்களவையில் இருந்த திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவையின் மையப்பகுதிக்கு சென்று அனுராக் தாக்கூர் பேச்சுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.
காற்று மாசுபாடு பிரச்னை குறித்து அவையில் விவாதிக்க ராகுல் அழைப்பு
நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்கள் நச்சுக் காற்றின் கீழ் வருவதால், மக்களவையில் காற்று மாசுபாடு பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார். அவர் கூறுகையில்,’ இந்தப் பிரச்னை ஒரு சித்தாந்த ரீதியானது அல்ல. எதிர்க்கட்சிகளும் ஆளும் கட்சி உறுப்பினர்களும் துஷ்பிரயோகங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் ஒரு விவாதத்தை நடத்த வேண்டும். இது குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும். பிரதமர் ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு முறையான திட்டத்தை வகுக்க வேண்டும். இது அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளில், நமது மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும்’ என்றார்.
அவைக்கு வராத அமைச்சர்களால் மாநிலங்களவை ஒத்திவைப்பு
மாநிலங்களவை நடவடிக்கைகளில் ஒன்றிய அமைச்சர்கள் யாரும் வராததால் அவை நடவடிக்கை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் 2001 டிச.13 அன்று தாக்குதல் நடத்தியதை முறியடித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய போது மாநிலங்களவையில் அமைச்சர்கள் யாரும் இல்லாதது தெரிய வந்தது. இதை எதிர்க்கட்சி எம்பிக்கள் அவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் அமைச்சர்கள் அவைக்கு வர அழைப்பு விடுத்தார். அவரது பதிலில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் திருப்தி அடையவில்லை. அமைச்சர்கள் வரும் வரை அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,’ இது சபைக்கு அவமானம். அமைச்சர் வரும் வரை நீங்கள் அவையை ஒத்திவைக்க வேண்டும்’ என்றார். இதையடுத்து அவை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்ட பிறகு, சபை மீண்டும் கூடியபோது, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அமைச்சர்கள் சபையில் இல்லாததற்கு வருத்தம் தெரிவித்தார்.
3-6 வயது குழந்தைகளுக்கு இலவச கல்வி, பராமரிப்பு தேவை
நாடு முழுவதும் 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய பராமரிப்பு மற்றும் கல்வியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநிலங்களவை நியமன எம்.பி. சுதா மூர்த்தி கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக ஒரு புதிய பிரிவு 21பி ஐ அறிமுகப்படுத்த அரசியலமைப்பில் திருத்தம் செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
