வங்கதேசத்துக்கு பிப்ரவரி 12ம் தேதி தேர்தல் நடைபெறும்: அந்நாட்டு தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

டாக்கா: வங்கதேசத்துக்கு பிப்ரவரி 12ம் தேதி தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஷேக் ஹசீனா பிரதமராக பதவி வகித்தபோது அரசுக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது. போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த நிலையில் இடைக்கால பிரதமராக பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார்.

ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு நடைபெறும் நிலையில் வங்கதேசத்துக்கு பிப்ரவரி 12ல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 300 தொகுதிகளை கொண்ட வங்கதேச பார்லிமென்ட் தேர்தலுக்கு நாளை( டிச.,12) முதல் டிச., 29 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு மீதான பரிசீலனை டிச.,29 முதல் 2026 ஜன.,4 வரை நடைபெறும். இதன் முடிவுகளை எதிர்த்து ஜன., 11ம் தேதி வரை முறையிடலாம். அதன் மீதான முடிவு ஜன.12 அறிவிக்கப்படும். வேட்புமனுக்களை திரும்ப பெற ஜன.,20ம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 மாதங்களுக்கு பிறகு தற்போது வங்கதேசத்துக்கு முறைப்படி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி, ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி இடையே போட்டி நிலவ வாய்ப்பு உள்ளது.

Related Stories: