×

“சத்திரியத் தமிழ் எழுதியவன் என்று சகலரும் கொண்டாடுவீர்”.. பாரதியார் பிறந்தநாளுக்கு வைரமுத்து கவிதை!

சென்னை: மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாரதியார் பிறந்தநாளையொட்டி இன்று, கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை வாசித்து வீடியோ வெளியிட்டுள்ளார். வைரமுத்து எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கவிதை வருமாறு:

ஒரு மகாகவி ஜனிப்பது
சதைவழிப்பட்ட
புழைவழியல்ல

காலம்
தன்னை யுகம்செய்துகொள்ள
ஒருவனைத்
தட்டித் தட்டித் தயாரிக்கிறது

அவனை
வறுமையால் ஆசீர்வதிக்கிறது
சனாதனத்தின்மீது மீசைவைக்கிறது

நூற்றாண்டுப் புழுக்கத்தில்
நுரையீரைலைப் பட்டினியிடுகிறது

சாப்பாட்டைப் பறித்து
சாம்ராஜ்யத்தோடு
சண்டையிடச் செய்கிறது

முக்காலம் இருள்செய்து
மூளைக்குள் சூரியன் வைக்கிறது

ராஜசபைகளில் மொழிபயிற்றிப்
பாமரவெளியில் பாடச்செய்கிறது

ஏதேனுமொரு தீயில்
இட்டு இட்டுச்
சுட்டுச் சுட்டுத்
தங்கம்தான் என்று
சான்றளிக்கிறது

தெருவைத் திரட்டி
அவமதிக்கச் செய்கிறது
தேசத்தையே கூட்டி
அஞ்சலிக்கச் சொல்கிறது

ஆயுளைப் பறிக்கிறது
புகழைத் திணிக்கிறது
மண்ணுக்குள் புதைத்து
மகாகவி ஆக்குகிறது

அவன்
அக்கிரகாரத்தான் என்றுசிலர்
அலட்சியம் செய்யாதீர்;
சத்திரியத் தமிழ் எழுதியவன் என்று
சகலரும் கொண்டாடுவீர்

வாழ்க பாரதி!

Tags : Sathriyat ,Vairamuthu ,Bharatiyar ,Chennai ,Mahagavi Bharatiyar ,Vairamuthu X ,
× RELATED விமானத்தில் வந்தபோது திடீர்...