ஊட்டியில் வெயில் வாட்டுவதால் நுங்கு விற்பனை அமோகம்

ஊட்டி : ஊட்டியில் வெயில் சுட்டெரிப்பதால் ‘நுங்கு’ விற்பனை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இம்முறை தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்த நிலையில், வட கிழக்கு பருவமழை கடந்த இரு மாதங்களாக பெய்தது. ஊட்டியில் தற்போது வெயில், மேக மூட்டம் மற்றும் பனி என காலநிலை மாறிமாறி வருகிறது. எனினும், கடந்த இரு தினங்களாக நீலகிரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது.

அதற்கு ஏற்றார் போல், இரவு நேரங்களில் குளிரும் அதிகமாக உள்ளது. தற்போது பகல் நேரங்களில் வெயில் வாட்டியெடுக்கும் நிலையில், குளிர்பான கடைகள் மற்றும் ஐஸ்கிரீம் கடைகளில் அதிகளவு சுற்றுலா பயணிகளை காண முடிகிறது.

அதே சமயம் ஊட்டியில் சாலையோரங்களில் தற்போது ‘நுங்கு’ விற்பனையும் துவங்கியுள்ளது. பொள்ளாச்சியில் இருந்து வாகனங்களின் மூலம் கொண்டு வந்து நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் நுங்கு மற்றும் பதநீர் விற்பனை செய்து வருகின்றனர். இதனை சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் வாங்கி சாப்பிட்டு மகிழ்கின்றனர்.

Related Stories: