பென்னாகரத்தில் நவீன தொழில்நுட்பத்தில் துவரை சாகுபடி மும்முரம்

*இரட்டிப்பு மகசூலால் மகிழ்ச்சி

பென்னாகரம் : பென்னாகரத்தில் நவீன தொழில்நுட்பத்தில் சாகுபடி செய்யப்பட்ட துவரை செழித்து வளர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் மற்றும் ஏரியூர், பெரும்பாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளதால், பருவமழையை நம்பி துவரை, நிலக்கடலை, அவரை, எள்ளு, கொள்ளு உள்ளிட்ட மானவாரிய பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதி விவசாயிகள் துவரை சாகுபடி பரப்பினை அதிகரித்துள்ளனர்.

அன்றாட சமையலில் துவரை அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் தேவை அதிகரித்துள்ளது. துவரை சாகுபடியில் மகசூலை அதிகரிக்க, தமிழக வேளாண் துறை பல்வேறு புதிய தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. பென்னாகரம் பகுதியில் நிலக்கடலை பயிரில் ஊடுபயிராகவும் மற்றும் முழு சாகுபடியாக துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், துவரை சாகுபடியில் விதைப்புக்கு பதிலாக, நாற்று பாவி 25 நாட்கள் வளர்ந்த நாற்றுகளை பிடுங்கி நிலத்தில் நடும் புதிய தொழில்நுட்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நாற்று நடும் முறையில் விவசாயிகள் துவரை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:பொதுவாக துவரை சாகுபடியில் விதை விதைக்கும் போது, துவரை செடிகளுடன் களைகளும் சேர்ந்து விரைவாக வளரும். சில நேரத்தில் களைகள் செடிகளை மூடி அவற்றின் வளர்ச்சியை தடுத்து விடும். களை எடுத்தால் மட்டுமே.

துவரை செடி வளர்ச்சி பெறும். மேலும், விதைப்பில் சில இடங்களில் மொத்தமாகவும், சில இடங்களில் இடைவெளி விட்டும் சீராக சாகுபடி இருக்காது. அதனால், மகசூலும் எதிர்பார்த்த அளவு கிடைக்காது. தற்போது, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நாற்று நடவு முறையில் இரட்டிப்பு மகசூல் கிடைக்கிறது. இதனால், களைகள் பிரச்னை குறைகிறது. செலவும் மிச்சமாகிறது.

செடிகள் 100 சதவீதம் நன்றாக வளர்ச்சி பெறுகிறது. உரம் போடுவது, தண்ணீர் பாய்ச்சுவது எளிமையாகிறது. அதிக பக்க கிளைகள் அடித்து மகசூல் இரட்டிப்பாக கிடைக்கிறது. விதைப்பு முறையில், ஏக்கருக்கு அதிகபட்சம் 700 கிலோ வரை கிடைக்கும். நாற்று நடும் புதிய முறையில் ஏக்கருக்கு, 1,500 கிலோ வரை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் 1,000 கிலோ உறுதியாக கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: