*குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தகவல்
கடலூர் : கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் புதுக்கோட்டை விஜயா தலைமையில், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் கசிமீர் ராஜ், மோனா மட்டில்டா பாஸ்கர் முன்னிலையில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் புதுக்கோட்டை விஜயா கூறியதாவது: குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், பெற்றோர்களில் ஒருவர் அல்லது பாதுகாவலர் அரவணைப்பில் வளரும் குழந்தைகளுக்காக அன்புக்கரங்கள் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் நடவடிக்கைகள், மாணவிகள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளர்கள் பணியமர்த்துவது, ஆய்வகங்கள் மற்றும் நூலகங்களில் ஒரு பெண் பணியாளர் இருப்பதை உறுதிசெய்வது, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா, அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் 1098 மற்றும் பள்ளிக்கல்வித்துறை உதவி எண் 14417 ஆகிய எண்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும், போக்சோ சட்டம் குறித்து ஆசிரியர்கள் உள்பட இதர அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பள்ளிக்கல்வித் துறை மூலம் அனைவருக்கும் கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் 329 தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் 3,098 குழந்தைகள் சேர்க்கை பெற்றுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பினால் 2021-26ம் ஆண்டு வரை இடைநிற்றலான சுமார் 1,611 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சமூக நலத்துறை மூலம் குழந்தை திருமணத்தை தடுப்பதற்காக குழந்தை திருமணம் மற்றும் இளம்வயது கர்ப்பம் அதிகமாக நடைபெறும் 47 கிராம ஊராட்சிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் பல்வேறு துறைகள் இணைந்து தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
10 முதல் 20 பெண் குழந்தைகளுக்கு ஒரு தன்னார்வலரை நியமித்து பள்ளி இடைநிற்றல் மற்றும் குழந்தை திருமணம் குறித்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை குறித்து அதிக அளவில் பள்ளிகளிலும், விடுதிகளிலும், பொது இடங்களிலும் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) தீபா, பயிற்சி ஆட்சியர் மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
393 வழக்குகள் பதிவு
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மேலும் கூறுகையில், குழந்தை திருமணம் தொடர்பாக 2025ம் ஆண்டில் 95 புகார்கள் பெறப்பட்டதில் 11 திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. 84 புகார்கள் தொடர்பாக வழக்குகள் நடைபெற்று வருகிறது.
காவல் துறையின் மூலம் 2025ம் ஆண்டில் குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் 393 வழக்குகள் பதியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தை தொழிலாளர் நலத்துறை மூலம் 1,615 தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 8 குழந்தைகள் குழந்தை தொழிலாளர் பணியிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர், என்றார்.
* குழந்தைகளுக்காக அன்புக்கரங்கள் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
* 10 முதல் 20 பெண் குழந்தைகளுக்கு ஒரு தன்னார்வலரை நியமித்து பள்ளி இடைநிற்றல் மற்றும் குழந்தை திருமணம் குறித்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
