சென்னை: அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் தொழில் பயிற்சி மையங்கள் (ITI) அமைக்க விபரங்களை பள்ளிக்கல்வித்துறை கோரியுள்ளது. ஏற்கனவே, ITI இருக்கும் இடங்கள் அல்லாத பகுதிகளை தேர்வு செய்ய வேண்டும், தொழில் மண்டலங்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளியான அறிக்கையில்; “பார்வையில் காணும் பொருளின்படி, பள்ளிக் கல்வி இயக்கக இயக்குநர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநருடன் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்துறை பயிற்சி மையங்கள் School (ITI) அமைப்பதற்கான செயல்முறை மற்றும் தகுதித் தணிக்கைகள் (Criteria) குறித்து ஆலோசித்து அதில் கீழ்க்கண்ட வசதிகள் கொண்ட அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் விவரம் கோரப்படுகிறது.
1. ஒவ்வொரு பள்ளியிலும் ITI-க்கு குறைந்தபட்ச நிலத் தேவையாக 0.5- ஏக்கர் (50 சென்ட்) நிலம் இருக்க வேண்டும்.
2. ஏற்கனவே கட்டப்பட்ட செய்முறை அறைகள், ஆய்வகங்கள் அல்லது பிற கட்டிடங்கள் பயன்பாடின்றி அல்லது குறைந்த பயன்பாட்டில் இருக்கும் நிலையில் இருந்தால் அத்தகைய பள்ளிகளை ITI-அமைப்பதற்கு பயன்படுத்தலாம்.
3. தொழில் பயிற்று நிலையங்கள் இல்லாத பகுதிகளில் உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
4. தொழில் மண்டலங்கள் / தொழில் சாலைகள் / தொழில் துறை பகுதிகளுக்கு அருகிலுள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதன் மூலம் தொழில் தொடர்புகள் மற்றும் மாணவர்களின் வேலை வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும்.
ஆகவே மேற்காண் வசதிகள் கொண்டுள்ள அரசு உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளை தேர்ந்தெடுத்து ஒரு வார காலத்திற்குள்அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
