கோவா: 25 உயிர்களை காவு வாங்கிய கோவா நைட் கிளப்பின் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்ற கோவா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உயிர் பலி வாங்கிய கோவா நைட் கிளப்புக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள ஒரு பிரபலமான இரவு விடுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானோர் அந்த இடத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் ஆவர்.
கடந்த ஆண்டு திறக்கப்பட்ட மற்றும் மாநில தலைநகர் பனாஜியில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பிர்ச் பை ரோமியோ லேன் என்ற இரவு விடுதியில் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் 14 ஊழியர்கள் உட்பட மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஏழு பேரின் அடையாளங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் விபத்தில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்திருந்தாலும், மீதமுள்ளவர்கள் மூச்சுத் திணறலால் இறந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், இந்த நைட் கிளப்-ஆனது ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஆக்கிரமிப்பு பகுதிகளை இடித்து அகற்ற கோவா அரசு உத்தரவிட்டுள்ளது.
