வாலன்சியா: ஸ்பெயினில் நடந்த மாரத்தான் தொலை தூர ஓட்டப் போட்டியில் கென்யாவை சேர்ந்த ஜான் கொரிர், ஜாய்சிலின் ஜெப்கோஸ்கெய் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். ஸ்பெயினின் வாலன்சியா நகரில், வாலன்சியா மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இப்போட்டியில் ஆடவர் பிரிவில் கென்யாவின் ஜான் கொரிர் (27), 2 மணி 2:24 நிமிடத்தில் போட்டி தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். இந்தாண்டில் அவர் வெல்லும் 2வது மாரத்தான் சாம்பியன் பட்டம் இது. அவருக்கு அடுத்ததாக, ஜெர்மனியின் அமனல் பெட்ரோஸ், 2 மணி 4:03 நிமிடங்களில் வந்து 2ம் இடம் பிடித்தார். இது, ஜெர்மனி நாட்டின் தேசிய சாதனையாக அமைந்தது.
நார்வே நாட்டின் அவெட் கிப்ராப், 2 மணி 4:24 நிமிடங்களில் போட்டி தூரத்தை கடந்து 3ம் இடத்தை பிடித்தார். முதலிடம் பிடித்த ஜான் கொரிர், மாரத்தான் ஓட்ட வரலாற்றில் 8வது மிகக் குறைந்த நேரத்தில் போட்டி தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளார். மகளிர் பிரிவிலும், கென்யாவே சாதனை படைத்து அசத்தியுள்ளது. மகளிர் பிரிவு மாரத்தானில் கென்ய வீராங்கனை ஜாய்சிலின் ஜெப்கோஸ்கெய் (32), 2 மணி 14:00 நிமிடங்களில் போட்டி தூரத்தை கடந்து சாதனை படைத்தார். இந்தாண்டில் நடந்த மாரத்தான் போட்டிகளில் இதுவே சாதனை ஓட்டமாக அமைந்துள்ளது. உலகளவில் மாரத்தான் வரலாற்றில், மகளிர் பிரிவில், ஜாய்சிலின் சாதனை, 4வது இடத்தை பிடித்துள்ளது.
