×

ஈடன் கார்டனில் கலக்கப்போவது யார்?; முதல் அரையிறுதியில் நாளை நியூசிலாந்து-தென் ஆப்பிரிக்கா மோதல்: பைனலில் கால்பதிக்க இரு அணிகளும் தீவிரம்

கொல்கத்தா: 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பலம் வாய்ந்த அணிகளான இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் நாளை மாலை 7 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் முதலாவது அரையிறுதியில் தென்ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இதுவரை ஒரு முறை கூட டி20 உலக கோப்பையை முத்தமிடாத இரு அணிகளும் அசுர மோதலில் ஈடுபட உள்ளதால் இந்த போட்டியை காண உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

நடப்பு உலக கோப்பை தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி தோல்வியையே சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அந்த அணியில் கேப்டன் மார்க்ரம், டி காக், பிரெவிஸ், மில்லர், ஸ்டப்ஸ் என பலமான பேட்டிங் படை உள்ளது. பந்துவீச்சிலும் பாஸ்ச், ரபாடா, நிகிடி, ஜான்சன் ஆகியோர் கட்டுகோப்பாக பந்துவீசி எதிரணியை திணறடிக்கின்றனர். இதனால் நாளைய போட்டியில் நியூசிலாந்து அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது. ‘சூப்பர்-8’ பிரிவு 2ல் இடம் பெற்ற நியூசிலாந்து அணி 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. ஒரு போட்டி மழையால் ரத்தாக, இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்ததால் நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை கிட்டதட்ட இழந்துவிடும் சூழல் அமைந்தது. 3 போட்டியில் 3 புள்ளி மட்டும் பெற்ற நிலையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 200 ரன்களுக்கு மேல் குவித்தும் குறிப்பிட்ட ரன் ரேட்டில் வெற்றி பெற முடியாத சூழலில் `ரன் ரேட்’ அடிப்படையில் பாகிஸ்தானை (3 புள்ளி) பின்தள்ளி அரையிறுதிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றது. ஏற்கனவே நடப்பு உலக கோப்பை தொடரில் தென்ஆப்பிரிக்காவிடம் தோற்றுள்ளதால் அதற்கு பழி தீர்க்கும் முனைப்பில் நியூசிலாந்து நாளை களமிறங்குகிறது.

நியூசிலாந்தை பொறுத்தவரை டிம் செய்பர்ட், ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா, பிலிப்ஸ், சேப்மேன், மிட்செல், சாண்ட்னர் என மிகப்பெரிய பேட்டிங் படையை கொண்டுள்ளது. குறிப்பாக ஃபின் ஆலன் களத்தில் நங்கூரமாய் நின்றுவிட்டால் எதிரணி பவுலர்களுக்கு தலைவலி தான். பிலிப்ஸ் மற்றும் மிட்செலும் அசத்தலான ஃபார்மில் உள்ளதால் நியூசிலாந்து அணி அரையிறுதியை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள காத்திருக்கிறது. பவுலிங்கை பொறுத்தவரை ஹென்றி மற்றும் ஃபெர்குசனின் அனுபவம் அரையிறுதியில் கைகொடுக்கும். ஸ்பின் பவுலிங்கில் இஷ் சோதி மற்றும் சாண்ட்னர் எதிரணியை அச்சுறுத்த காத்திருக்கின்றனர்.

அனுபவம் கை கொடுக்கும்: கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் விளையாடி உள்ளதால் நாளைய போட்டியில் சிறப்பாக விளையாட அந்த அனுபவம் கை கொடுக்கும் என்று நியூசிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் டேரில் மிட்செல் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேற, எங்களுக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்துள்ளது. அதனால் உற்சாகமாக உள்ளோம். நாளை போட்டியில் விளையாட தெளிவாக திட்டமிட்டுள்ளோம். போட்டியின்போது, சின்ன சின்ன விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி, களத்தில் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்போம். பைனலுக்கு செல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. இலங்கை மைதானங்களை விட, இந்திய மைதானங்கள் சற்று வித்தியாசமானவை. கடந்த இரு மாதங்களாக இந்தியாவில் விளையாடி வருகிறோம். மைதானத்தில் சூழ்நிலை குறித்து எங்களுக்கு ஓரளவுக்கு தெரியும். தற்போது, தொடரின் சிறந்த அணியை எதிர்கொள்ள ஆர்வமாக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

பிட்ஸ்… பிட்ஸ்… பிட்ஸ்…
* டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச்சை (3120) முறியடிக்க குயின்டன் டி காக்கிற்கு இன்னும் 35 ரன்களே தேவை.
* தென்ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் டி20யில் 2000 ரன்களை நிறைவு செய்ய இன்னும் 52 ரன்களே தேவை. இன்று அந்த ரன்களை அடிக்கும்பட்சத்தில் டி20யில் 2000 ரன்களை நிறைவு செய்த 4வது தென்ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனை படைப்பார்.
* இஷ் சோதி நியூசிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் மற்றும் டி20 போட்டிகளில் 2வது அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற அவருக்கு இன்னும் 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவை.
* டேவிட் மில்லர் டி20 போட்டிகளில் 141 சிக்ஸர்களை அடித்துள்ளார். இன்று அவர் 4 சிக்ஸர்கள் அடிக்கும் பட்சத்தில் டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 10 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் அவருக்கு இடம் கிடைக்கும்.
* ரியான் ரிக்கல்டன் நடப்பு உலக கோப்பை தொடரில் மொத்தம் 15 சிக்ஸர்கள் அடித்துள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற சாதனையை படைக்க அவருக்கு இன்னும் 4சிக்ஸர்கள் தேவை.
* டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 5வது அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனை படைக்க ஆன்ரிச் நோர்ட்ஜேக்கு இன்னும் 3 விக்கெட்டுகள் தேவை.
* நடப்பு டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற அந்தஸ்தை பெறுவதற்கு தென் ஆப்பிரிக்காவின் லுங்கி நிகிடிக்கு இன்னும் 2 விக்கெட்டுகள் தேவை.

Tags : Eden ,Gardens ,New Zealand ,South Africa ,Kolkata ,2026 ICC T20 World Cup ,India ,England ,Eden Gardens ,
× RELATED பிரேக் செஸ் சாம்பியன்ஷிப் எட்டும் தூர...