மதுரை: மதுரையில் நேற்று நடந்த ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் எகிப்து அணி, ஷூட் அவுட்டில் கனடா அணியை வீழ்த்தியது. ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள், சென்னை, மதுரையில் நடந்து வருகின்றன. இப்போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிய நிலையில், மதுரையில் நேற்று, 23 மற்றும் 24ம் இடங்களுக்காக நடந்த முதல் போட்டியில், நமீபியா-ஓமன் அணிகள் மோதின. இதில் சிறப்பாக செயல்பட்ட நமீபியா 4-2 என்ற கணக்கில் வென்றது. 21 மற்றும் 22வது இடங்களுக்காக நடந்த 2வது போட்டியில், எகிப்து-கனடா அணிகள் மோதின. இரு அணிகளும் சிறப்பாக ஆடியதால், 2-2 என்ற கணக்கில் சமநிலை ஏற்பட்டது.
அதையடுத்து நடந்த ஷூட்அவுட்டில், எகிப்து அணி, 3-2 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடியது. அதன் பின், 19 மற்றும் 20வது இடங்களுக்கு நடந்த போட்டியில் சீனா-கொரியா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில், கொரியா, 5-4 என்ற கோல் கணக்கில் வென்றது. கடைசியாக, 17 மற்றும் 18வது இடங்களுக்காக நடந்த போட்டியில், வங்கதேசம்-ஆஸ்திரியா அணிகள் களம் கண்டன. இப்போட்டியில் வங்கதேசம், 5-4 என்ற கோல் கணக்கில் வென்று, 17வது இடத்தை பிடித்தது.
