தொழில் முதலீட்டாளர் மாநாடு மூலம் தமிழ்நாட்டில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: ரூ.11 லட்சத்து 83 ஆயிரம் கோடி முதலீடுகள் குவிந்தன, மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

மதுரை: தமிழகத்தில் இதுவரை நடந்த தொழில் முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ.11 லட்சத்து 83 ஆயிரம் கோடி முதலீடுகள் குவிந்தன. 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து உள்ளது என்று மதுரையில் நடந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார். மதுரையில் ‘தமிழ்நாடு வளர்கிறது (டிஎன் ரைசிங்)’ என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று நடந்தது. இம்மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

மாநாட்டில் 56,766 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.36,660 கோடி முதலீட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மாநாட்டில் மதுரை மாவட்டம் மேலூரில் சிப்காட் தொழிற்பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்ததும் நலிவடைந்த தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அவசியம், அவசரம் அறிந்து, புரிந்து, அதற்காக பல்வேறு ஆலோசனைகள் மேற்கொண்டோம். வெளிநாடுகளின் முதலீடுகளை ஈர்க்கத் திட்டமிட்டு பயணங்கள் மேற்கொண்டேன்.

சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து என பல்வேறு நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்துப் பேசி, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வைத்து, முதலீட்டாளர்களின் முதல் முகவரியே தமிழ்நாடு தான் என்ற நிலையை உருவாக்கினோம். இதனை உறுதிப்படுத்திட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில், ‘டிஎன் ரைசிங்’ மாநாடுகள் நடத்தி வருகிறோம்.

தூத்துக்குடி, ஓசூர், கோவையை தொடர்ந்து மதுரையில் இம்மாநாடு நடக்கிறது. இந்த முதலீட்டாளர் மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம்! இந்த மாநாட்டில், 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 36 ஆயிரத்து 660 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, 56 ஆயிரத்து 766 பேருக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கப்படுகிறது.தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில், உங்கள் ஒவ்வொருவருடைய பங்கும் மிக அவசியம்!

‘மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி – மாவட்டங்கள் தோறும் பரவலான வளர்ச்சி’ என்று சொன்னதை எங்களுடைய செயல்கள் மூலமாக நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை 11 லட்சத்து 83 ஆயிரம் கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளது. ஒப்பந்தங்களுக்கு பிறகு இத்தோடு வேலை முடிந்ததாக எண்ணாமல், அனைத்துத் துறைகளையும் தொடர்ந்து ஆய்வு செய்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கான திட்டங்களில் 80 சதவீதத்திற்கும் அதிக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவில் வேறெங்கும் இந்தளவிற்கு அவுட்புட் இல்லை. ஒப்பந்தங்களையெல்லாம் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதில் நானும், துறை அமைச்சரும் கண்ணும் கருத்துமாக இருப்போம். வியட்நாம் சென்று அமைச்சர் டிஆர்பி.ராஜா மின்சார இருசக்கர வாகனங்கள், பஸ்கள் தயாரிக்கும் ‘வின்பாஸ்ட்’ தொழிற்சாலையையே நம் தூத்துக்குடிக்கு கொண்டு வந்துள்ளார்.

முதலீடுகள் சாதாரணமாக கிடைத்து விடாது. முதலமைச்சர் கேட்டார் என்பதற்காக யாரும் முதலீடு செய்திட வரமாட்டார்கள். அம்மாநிலத்தின் கொள்கை, மனிதவள திறன், உட்கட்டமைப்புகள், சட்டம் ஒழுங்கு, நிர்வாகத் திறன், நீண்டகால நிலைத்தன்மை என பலவற்றையும் நுணுக்கமாக ஆய்வு செய்த பிறகே முதலீட்டாளர்கள் வருவார்கள். இதில் முதலீட்டாளர்கள் மனதில் தமிழ்நாடு தான் முதலில் இருப்பதை அறிந்து பெருமை கொள்வதோடு, எங்கள் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

தென் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப மையமாக மதுரை உயர்ந்து வருகிறது. பல்வேறு தொழில் மருத்துவ நிறுவனங்கள் மதுரையில் நிறுவப்பட்டு பெரும் முதலீடுகள் செய்து, வேலை வாய்ப்புகளை வழங்கி, தொழில், பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றனர். சர்வதேச விமான நிலையம் உள்ளது. அருகே தூத்துக்குடி துறைமுகம், முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் என உட்கட்டமைப்பு வசதிகளுடன் வலிமைமிக்க நகராக இருக்கிறது.

சிட்கோ தொழிற் பேட்டைகள், வடபழஞ்சி மற்றும் இலந்தைக்குளம் எல்காட் தொழில்நுட்ப பூங்காக்கள் போன்றவற்றால் மதுரை பெரும் தொழில்துறை மையம் திறன் கொண்டிருக்கிறது. உயர்கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், உயர்திறன் மிக்க மனித வளத்தை உருவாக்கும் வலுவான அடித்தளமாக இருக்கிறது. தென் மாவட்டங்களில், தொழில் முன்னேற்றம் காண பல்வேறு முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டுள்ளது.

ஒன்றிய அரசுடன் இணைந்து, விருதுநகர் மாவட்டத்தில், ஆயிரத்து 894 கோடி ரூபாய் முதலீட்டில், ஆயிரத்து 52 ஏக்கர் பரப்பளவில், பிஎம் மித்ரா ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா உருவாகி வருகிறது. இது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புகளைத் தரும். தேனி மாவட்டத்தில், 424 ஏக்கரில் ஒரு பொதுப் பொறியியல் பூங்கா, மெகா உணவுப் பூங்கா, சிவகங்கை மாவட்டத்தின் இலுப்பைக்குடியில் 108 ஏக்கரிலும், கழனிவாசலில் 102 ஏக்கரிலும் தொழிற்பூங்கா ஒதுக்கப்பட்டிருக்கிறது.

சென்னை, கோவையை தொடர்ந்து மதுரையில் ரூ.314 கோடி மதிப்பில் டைடல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. சிவகங்கையில் டைடல் நியோ பூங்கா நிறுவி வருவதுடன், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரியிலும் இந்த பூங்காக்கள் நிறுவப்படும். ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தூத்துக்குடி, ஓசூர், கோவையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடுகளில் ரூ.1 லட்சம் கோடி உறுதி செய்த முதலீடு கிடைத்திருக்கிறது.

2 லட்சம் பேருக்கு நேரடி, மறைமுக வேலை வாய்ப்பிருக்கிறது. இவ்வகையில் 186 திட்டங்களை ஈர்த்திருக்கிறோம். இங்கு கப்பல் கட்டுமானம், தோல் அல்லாத காலணி, மின்னணுவியல், உணவு பதப்படுத்துதல் துறைகளில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக மதுரை மேலூரில் 278.26 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட சிப்காட் தொழிற்பூங்காவிற்கு அடிக்கல் நாட்டியுள்ளேன்.

மகளிர் முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சிக்கு பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் அதிக பெண்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இதற்கு வலுசேர்ப்பதாக தைவான் நாட்டின் பே ஹேய் குழுமம், தோல் அல்லாத காலணிகள் உற்பத்தித் திட்டத்தை மதுரையில் நிறுவுகிறது. இதனால் பெண்கள் என 15 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.

ஹூண்டாய் நிறுவனமும் தனது கப்பல் கட்டுமான திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனங்களையும் ஈர்ப்பதாக உள்ளது. எஸ்எப்ஓ டெக்னாலஜிஸ் நிறுவனம் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்தை தேனியில் மேற்கொள்கிறது. இப்படி உயர் தொழில்நுட்ப நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ரிலையன்ஸ் நிறுவனம் ‘பயோ எனர்ஜி’ துறையில் தமிழ்நாட்டில் ரூ.11 ஆயிரம் கோடியை முதலீடு செய்திருக்கிறது. கீழடியின் பாரம்பரியத்திலிருந்து இன்றைய நாகரிகம் வரை, தளராத வளர்ச்சியில் தன்னை இந்த மண் தகவமைத்துக் கொண்டுள்ளது. 42 லட்சம் மக்கள் தொகையை எதிர்நோக்கி நகர் ஊரமைப்பு இயக்ககம் தயாரித்துள்ள ‘மதுரை மாஸ்டர் பிளான் 2044’ புதிய நகர்ப்புற வடிவமைப்பை கொண்டிருக்கிறது.

மதுரை விளாச்சேரி, அம்பாசமுத்திரம் பகுதி கலைஞர்களின் பாரம்பரிய பொம்மை தயாரிப்பு திறனை உயர்த்த, புதிய சந்தை, முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்க ‘பொம்மை உற்பத்திக் கொள்கை’யை தற்போது வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். தொழிலுடன் கல்வி சேர்ந்து அறிவுப்பொருளாதாரம் உருவாகிட மதுரை மண்டலத்தில், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், இப்பகுதி முக்கிய நிறுவனங்களுடன் இணைந்து, ரூ.13 கோடி தொடக்க முதலீட்டில், பல்கலை ஆராய்ச்சி பூங்கா நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்கிறது.

இந்நிறுவனம் ரூ.2 கோடியே 25 லட்சம் மானியத்துடன் பயன்பாட்டு ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதியளிக்கிறது. முதல் தவணையாக ரூ.75 லட்சத்தை ஆராய்ச்சியாளர்களிடம் இந்நிகழ்ச்சியில் நான் வழங்கியுள்ளேன். தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் குறிக்கோளுடன் நாங்கள் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இதற்கு முதலீட்டாளர்களின் பங்கு மிக அவசியம். வருங்காலத் திட்டங்கள் எல்லாவற்றையும் தமிழ்நாட்டிலேயே நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

* கீழடியின் பாரம்பரியத்திலிருந்து இன்றைய நாகரிகம் வரை, தளராத வளர்ச்சியில் தன்னை இந்த மண் தகவமைத்துக் கொண்டுள்ளது.

* வேனை நிறுத்தி மனு வாங்கிய முதல்வர்: செல்பி எடுத்து உற்சாகமடைந்த பொதுமக்கள்
மதுரையில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா பந்தலுக்கு வேனில் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், விழா பந்தலின் முன்பு வைக்கப்பட்டிருந்த கலைஞர் கனவு இல்லத்திட்ட மாதிரி மற்றும் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்தார். அங்கிருந்த விழா மேடைக்கு நடந்தே வந்தார்.

மேடையின் நடுப்பகுதியில் உள்ள நடைமேடை வழியாக முதல்வர் நடந்த படி அங்கிருந்த அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தவாறு சென்றார். அப்போது சிறுவர்கள், பெண்கள் என பலரும் முதல்வருடன் கைகுலுக்கியும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். அப்போது, 100க்கும் மேற்பட்டவர்கள் முதல்வரிடம் மனுக்களை கொடுத்தனர்.

இதேபோல், முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுச்சாலையில் உள்ள தனியார் விடுதியில் இருந்து வெளியே வந்தபோது விடுதியின் வெளியில் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். அவர்களை பார்த்ததும் முதல்வர் தனது வேனை நிறுத்தினார். அப்போது பலரும் முதல்வரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர். வீரபாண்டியை சேர்ந்த ஆர்த்தி தனது கைக்குழந்தையுடன் வந்து முதல்வரிடம் மனு அளித்தார்.

* ‘கோயில் நகரமான மதுரை தொழில் நகரமாகவும் மாறும்’
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘மதுரைக்கு மற்றொரு பெயருண்டு தூங்கா நகரம். இதைவிட, எப்போதும் விழிப்புடன் இருக்கும் நகரம் என்றுதான் சொல்ல வேண்டும். வைகை நதி பாயும் மண், மீனாட்சி கோயிலின் கலையழகு, மல்லிகை, மரிக்கொழுந்து மணம், நள்ளிரவிலும் இட்லியில் ஆவி பறக்கும். சுங்குடி சேலைகள், கைவினைப் பொருட்கள் ஈர்ப்பதுடன், மதுரையை ஒட்டிய கீழடி, தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகுக்கே காட்டும் சான்றுகள் தந்துள்ளது.

இச்சான்றுகள் இந்தியாவின் வரலாற்றையே மாற்றி எழுத வைத்திருக்கிறது. நம் அறிவார்ந்த, மதச்சார்பற்ற வாழ்க்கை முறையை மீண்டும் நினைவூட்டியுள்ளது. எனவே தான் இந்தியாவின் வரலாற்றை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கி எழுதவேண்டும் என்கிறேன். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இம்மதுரை கோயில் நகரமாக மட்டுமல்லாது, தொழில் நகரமாகவும் புகழ் பெறவேண்டுமென்பதே ஆசையும் லட்சியமும் ஆகும்’ என்றார்.

* மதுரையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 56,766 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.36,660 கோடி முதலீட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

* திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கான திட்டங்களில் 80 சதவீதத்திற்கும் அதிக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவில் வேறெங்கும் இந்தளவிற்கு அவுட்புட் இல்லை.

* தென் மாவட்டங்களில், தொழில் முன்னேற்றம் காண பல்வேறு முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டுள்ளது.

Related Stories: