×

மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலத்துக்கு வேலுநாச்சியார் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 

சென்னை: மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம் என பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மதுரை தொண்டி சாலை அண்ணா பேருந்து நிலைய சந்திப்பில் தொடங்கி ஆவின் சந்திப்பு, மேலமடை சந்திப்பு வழியாக மதுரை சுற்றுச் சாலையில் இணைந்து அதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் முடிவடைகிறது.

இச்சாலை மதுரை மாவட்டத்தையும், சிவகங்கை மாவட்டத்தையும் இணைக்கும் முக்கிய மாநில நெடுஞ்சாலை ஆகும். இச்சாலையில் அதிகமான கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. மேலும் போக்குவரத்துச் செறிவு அதிகமாக உள்ள காரணத்தினால் இப்பகுதியில் உள்ள மூன்று சந்திப்புகளிலும் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை நிலவிவந்தது. பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையிலும் நெரிசலின்றி வாகனங்கள் செல்லும் வகையிலும் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தால் மதுரை தொண்டி சாலை, கோரிப்பாளையம் முதல் சுற்றுச் சாலை வரை போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும். 950 மீட்டர் நீளமுள்ள இந்த முக்கியமான மேம்பாலத்திற்கு சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளையரை எதிர்த்து வீரப்போர் புரிந்து வெள்ளையரிடம் இருந்து சிவகங்கையை மீட்டு சிறப்பான ஆட்சி புரிந்த வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Tags : Madurai Melamadai Junction Road ,Velunachiyar ,Chief Minister ,MK Stalin ,Chennai ,Veeramangai Velunachiyar ,Madurai Thondi Salai Anna Bus Stand Junction ,Aavin Junction ,Melamadai… ,
× RELATED விமான நிலையத்தில் பரபரப்பு:...