புதுடெல்லி: டெல்லியில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. நேற்று அளித்த பேட்டி: திருப்பரங்குன்றத்தில் இந்து மதத்திற்கு எதிராக இந்து மக்களின் மனநிலையை புண்படுத்தும் வகையில் கோவிலுக்குச் சம்பந்தமே இல்லாத ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக்கல் (சர்வே ஸ்டோன்) ஒரு கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பிரச்னைகளை உருவாக்குகின்றனர். இதை பயன்படுத்திக்கொண்டு பாஜக மத கலவரத்தை உருவாக்க நினைத்தது. பாஜகவைச் சேர்ந்தவர்கள் இதை இன்னொரு அயோத்தியாக மாற்றிவிட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனையை எழுப்பிய பொழுது, அமைச்சர் கிரண் ரிஜிஜு மூத்த உறுப்பினர் டிஆர் பாலு அவர்களைப் பார்த்து, நீங்கள் பேசுவது உங்களுக்கும் நல்லதல்ல உங்கள் கட்சிக்கும் நல்லதல்ல என்று மிரட்டக்கூடிய வகையில் எச்சரிக்கை விடுக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நேரமில்லா நேரம் என்பது உறுப்பினர்களின் நேரம். அவர்கள் தங்களது பிரச்சனைகளை முன்வைக்கக் கூடிய நேரம். ஆனால் அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு அமைச்சர் எல்.முருகன் அவர்கள் தேவையில்லாமல் மிக நீண்டதொரு உரையை ஆற்ற அனுமதிக்கப்பட்டார். அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவரும் பல பொய் பிரச்சாரங்களை முன்வைத்தார்.
தமிழ்நாடு அரசின் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் காழ்ப்புணர்வை உருவாக்கவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் அவர் பேசினார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது, நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னையை எழுப்பியபோது, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எங்களோடு நின்றார்கள். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது. மத பிரச்னைகள் இல்லாத மாநிலமாக இருக்கிறது. பாஜக, ஆட்சி செய்யும் ஓர் இடத்திலாவது மத நல்லிணக்கமும் அமைதியும் இருக்கிறதா? யாரால் அங்கு மதப் பிரச்சனைகள் உருவாகிறது? அப்படிப்பட்ட பிரச்சனைகள் இல்லாத, மனிதர்கள் மனிதர்களாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை திமுக ஆட்சி உருவாக்கி தந்திருக்கிறது. அதைக் குலைக்கத்தான் பாஜக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது, என்று தெரிவித்தார்.
