×

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் ஸ்டார்கள், குடில்கள், எல்இடி லைட்டுகள் விற்பனை ஜரூர்

கேடிசி நகர்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் ஸ்டார்கள், குடில்கள். எல்இடி லைட்டுகள் விற்பனை ஜரூராக நடந்து வருகிறது. இயேசுகிறிஸ்து உலகில் அவதரித்த டிசம்பர் 25ம் தேதி ஆண்டுதோறும் கிறிஸ்தவ பெருமக்களால் கிறிஸ்துமஸ் பண்டிகையாகயாக கோலாககமாகக் கொண்டாடப் படுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ம் தேதி வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளை தற்போதே அலங்கரிக்கத் துவங்கியுள்ளனர். இதற்காக தங்களது வீடுகளுக்கு வர்ணம் பூசி ஸ்டார்கள் மற்றும் குடில்களை மகிழ்ச்சியுடன் வடிவமைத்து வருகின்றனர். பொதுவாக டிசம்பர் மாதம் பிறந்தாலே கிறிஸ்துமஸ் களை கட்டத் துவங்கும் என்பதோடு கிறிஸ்தவ ஆலயங்களும், வர்ணம் பூசப்பட்டு அலங்கரிக்கப்படுவது வழக்கம்.

அந்தவகையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிக அளவில் வசித்து வரும் கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். இதன்காரணமாக கிறிஸ்துமஸ் ஸ்டார்கள், அலங்கார விளக்குகள், குடில்கள் விற்பனையும் இப்போதே ஜரூராக நடந்துவருகிறது. இந்நிலையில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் பாளையங்கோட்டையில் ஏராளமான கிறிஸ்துமஸ் பொருட்கள் விற்பனை கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் முக்கிய நகரங்களிலும் விற்பனை சூடுபிடித்துள்ளது. பாளை முருகன்குறிச்சியில் உள்ள டயோசீசன் டெப்போவில் கண்ணைக் கவரும் வகையில் விதவிதமான கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனைக்காக வந்துள்ளன. மேலும் இந்த ஆண்டு புதி தாக எல்இடி ஸ்டார்கள் வித விதமான வண்ணங்களில் கண்ணை கவரும் வகையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இதேபோல் எல்இடி ஸ்டார்களும் தரத்திற்கேற்ப ரூ.300 முதல் ரூ.3000 வரை விற்கப்படுகின்றன. மேலும் சீரியல் லைட்டுகள் ரூ.300 முதல் ரூ.1500 வரை விற்கப்படுகின்றன. 4 ஸ்டார் லைட்டுகள் புதிதாக விற்பனைக்கு வந்துள்ளன. அத்துடன் 5 பெல் அலங்கார விளக்குகள், தோரண விளக்குகள் விதவிதமான வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை தவிர குடில் செட்டுகள் தற்போது புது மாடல்களில் வந்துள்ளன. இவை ரகத்திற்கு ஏற்றாற்போல் தலா 500 ரூபாயில் இருந்து 35 ஆயிரம் ரூபாய் வரை விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ரெசின், பிளாஸ்டா பாரீஸ் ஆகியவை 3 இன்ச் முதல் சுமார் 1 அடி உயரம் வரை தேவ தூதர் சிலைகளுடன் விற்பனைக்கு வந்துள்ளன.

பைபர் குடில்களும் புதிதாக இடம் பெற்றுள்ளன. மேலும் எலக்ட்ரிக் மரம், ஜெல் டைப், கிரைஸ்டால் ட்ரீ ஆகியவை 10 அடி உயரம் வரை விற்பனைக்காக இடம்பெற்றுள்ளன. இவை தவிர கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் வீணை வாசிப்பது போன்றும் பல்வேறு ரகங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை ரூ.11 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையாவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து டயோசீசன் டெப்போ கண்காணிப்பாளர் ராபர்ட் ஜெபக்குமார், மேலாளர் மோகன்ராஜ், விற்பனை மேலாளர் ஜெபர்சன் ஆகியோர் கூறுகையில் ‘‘கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விதவிதமான ஸ்டார்கள், குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தாக்கள், சீரியல் லைட்டுகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன’’ என்றனர்.நெல்லை மாவட்டத்தை போன்றே தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்திலும் அனைத்து நகரங்களிலும் விதவிதமான ஸ்டார்கள், குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தாக்கள், சீரியல் லைட்டுகள், கேக்குகள் விற்பனை களைகட்டி உள்ளது.

Tags : Christmas ,KTC Nagar ,Jesus Christ ,Christians ,
× RELATED மேகதாது அணை தொடர்பான அறிக்கையை நீர்வள...