யூடியூபர் மீதான அவதூறு வழக்கு; வாய்தா கேட்ட பாஜக நிர்வாகிக்கு ரூ.5,000 அபராதம்: டெல்லி நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: யூடியூபர் துருவ் ரதிக்கு எதிரான அவதூறு வழக்கை இழுத்தடித்த பாஜக நிர்வாகிக்கு டெல்லி நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மும்பை பாஜக செய்தித் தொடர்பாளர் சுரேஷ் நகுவா, கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் பிரபல யூடியூபர் துருவ் ரதி வெளியிட்ட வீடியோ ஒன்றில் தன்னை ‘வன்முறையாளர்’ என்று தொடர்புபடுத்திப் பேசியதாகக் கூறி டெல்லி நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வீடியோவால் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற விசாரணையின்போதே, சுரேஷ் நகுவா தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் பிழைகள் இருந்ததைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அதைச் சரி செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது. இருப்பினும், திருத்தப்பட்ட ஆவணத்திலும் பிழைகள் இருந்ததால், சான்றளித்த நோட்டரி அதிகாரியையும் நீதிமன்றம் முன்பு கண்டித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு மாவட்ட நீதிபதி பிரீதம் சிங் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுரேஷ் நகுவா தரப்பில் ஆஜரான புதிய வழக்கறிஞர், தான் வழக்கில் ஆஜராகி வாதாட கூடுதல் அவகாசம் வேண்டும் எனக் கோரி வாய்தா கேட்டார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த துருவ் ரதி தரப்பு வழக்கறிஞர்கள், ‘மனுதாரர் தொடர்ந்து வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் செயல்படுகிறார்’ என்று வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காரணமின்றி காலதாமதம் செய்வதைக் கண்டிக்கும் வகையில் பாஜக நிர்வாகி சுரேஷ் நகுவாவுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். ஆவணங்களில் உள்ள பிழைகளைச் சரிசெய்ய அவருக்குக் கடைசி வாய்ப்பு வழங்கப்படுவதாகத் தெரிவித்த நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை அடுத்தாண்டு மார்ச் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories: