கல்லூரி மாணவர்களுடன் காணொலியில் ஆலோசனை கலெக்டர் சந்தீப் நந்தூரி நடத்தினார் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்காக

திருவண்ணாமலை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பாக, கல்லூரி வளாக தூதுவர்களாக செயல்படும் மாணவர்களுடன் காணொலியில் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் நியமிக்கப்பட்டுள்ள கல்லூரி வளாக தூதுவர்களான மாணவர்களுடன் காணொலி காட்சி மூலம் கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று ஆலோசனை நடத்தினார்.

அதில், டிஆர்ஓ ரத்தினசாமி, கோட்டாட்சியர்கள் தேவி, ஜெயராமன், விமலா மற்றும் அனைத்து தாசில்தார்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரி வளாக தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள மாணவர்கள், தங்கள் கல்லூரில் 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து மாணவர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கி, வழிகாட்ட வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

அப்போது, வாக்காளர் பட்டியலில் ஆன்லைன் இணையதளம் மூலமாகவும், சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர்கள், தாசில்தார்கள் மூலமாகவும் பெயர் சேர்க்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. மேலும், இந்த பணியில் சிறப்பாக செயல்படும் கல்லூரி வளாக தூதுவர்களாக செயல்படும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் சிறப்பு பரிசாக வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

Related Stories: