வாதிரியார் சாதி பெயரை மாற்றக்கூடாது

தூத்துக்குடி, ஜன.13: தூத்துக்குடி முத்தையாபுரம் வாதிரியார் சமுதாய இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் செந்தில்ராஜிடம் கொடுத்துள்ள மனுவில், எங்களது வாதிரியார் சமுதாயத்தை கலாசாரம், பண்பாட்டில் முற்றிலும் எதிர்மறையான மாற்று சமுதாயமான பள்ளன், குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திர குலத்தான் ஆகிய ஆறு பிரிவுகளுடன் இணைத்து ஒரேபெயரில் அழைக்க தமிழக அரசு பரிந்துரை செய்யக்கூடாது.

கடந்த 27.2.2019ல் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் 6 உட்பிரிவுகளை இணைத்து அரசாணை வெளியிட ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு எங்களின் கோரிக்கையை ஏற்று அந்த ஆய்வுக்குழுவில் வாதிரியார் சாதி பெயரை நீக்கம் செய்தனர். இதனடிப்படையில், வாதிரியார் சாதி பெயரை புதிதாக பெயர் மாற்றம் செய்யக்கூடாது.

தற்போது வாதிரியார் சாதி பெயர் ஆதிதிராவிடர் பட்டியலில் வரிசை எண் 72ல் தனியாகத்தான் உள்ளது. நாங்கள் தொடர்ந்து இதே இடத்தில் பயணிக்க விரும்புகிறோம் என்பதை அரசுக்கு தெரியபடுத்தி கொள்கிறோம்.இந்நிலையில், ஆன்லைன் மூலம் வழங்கப்படும் வாதிரியார் சாதி சான்றிதழில் வதிரியன் என தவறாக பதிவிடப்படுவதை திருத்தி வாதிரியான் என சரியாக பதிவிட நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.

Related Stories:

>