சென்னை: சென்னை கிண்டியில் தொழில் முனைவோர் சான்றிதழ் படிப்பை தங்கி பயில ரூ.2.34 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தங்கும் விடுதியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: அனைத்துத்துறை தொழில் முனைவோர்களுக்கும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலம் தொழில் முனைவோர் விழிப்புணர்வும், திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற நான்கரை ஆண்டு காலத்தில் இந்த திட்டங்களின் கீழ் 50 லட்சத்து 18 ஆயிரத்து 91 பேருக்கு தொழில் முனைவு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க இளைஞர்களுக்கும், மாணவர்ளுக்கும் அரசு உதவி தொகையை உயர்த்தி வழங்கி வருகிறது. புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்புக்காக வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாகவும், அவற்றை தயாரித்து – சந்தைப்படுத்த வழங்கப்படும் உதவித்தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ், 572 புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு ரூ.14 கோடியே 50 லட்சம் உதவி தொகையாக வழங்கப்படுகிறது. பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாணவ குழுக்களின் சிறந்த புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது.
இளைஞர்கள், மாணவர்கள் அரசு வழங்கும் நிதி உதவிகளை பெற்று புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி, உலக அரங்கில் தமிழ்நாட்டிற்கு நற்பெயரை ஏற்படுத்திட வேண்டும். முதல்வரின் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னும் இலக்கினை அடைய துணை புரிய வேண்டும். விழாவில் கூடுதல் தலைமை செயலாளர் அதுல் ஆனந்த், சிட்கோ மேலாண்மை இயக்குநர் கார்த்திக், தொழில் வணிக ஆணையர் நிர்மல்ராஜ், இயக்குநர் அம்பலவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
