சென்னை: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 2023-24ம் ஆண்டில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை ஈடுசெய்யும் வகையில் ரூ.424 கோடியே 98 லட்சம் தொகையை விடுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணை: தமிழகத்தில் இயங்கி வரும் 7594 தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை 2023-24ம் கல்வி ஆண்டில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கான கல்விச் செலவுத் தொகையை ஈடுசெய்யும் வகையில் ரூ.424 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரத்து 724 தொகை அனுமதித்து கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் தேதி ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மேற்கண்ட தொகை விடுவிக்கப்பட வேண்டும் என்று மாநில திட்ட இயக்குநருக்கு கோரிக்கைகள் வந்தன. அதன் பேரில் மேற்கண்ட தொகையை தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் அரசிடம் கேட்டுக் கொண்டார். அவரின் கருத்துருவை கவனமாக பரிசீலித்து மேற்கண்ட தொகையை ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அரசாணையில் தெரிவித்துள்ளார்.
