நேஷனல் ஹெரால்டு வழக்கில் 12 ஆண்டுக்கு பின் புது எப்ஐஆர் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: பாஜ அரசு மீது கார்கே சாடல்

 

புதுடெல்லி: அமலாக்கத்துறை கொடுத்த புகாரின் பேரில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக டெல்லி டெல்லி காவல்துறை புதிய எப்ஐஆர்-ஐ பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில்,12 ஆண்டுகளுக்கு பின் திடீரென காங்கிரஸ் கட்சி மற்றும் காந்தி குடும்பத்தினரை குறி வைத்து நேஷனல் ஹெரால்டு வழக்கில் புது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. மோடி அரசாங்கமும், அமலாக்கத்துறைக்கும் புதிய அவதூறுகள் எதுவும் கிடைக்கவில்லை. தேர்வு செய்யப்பட்ட வழக்குகள், மறு சுழற்சி செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை வைத்து எதிரிகளை கூண்டில் நிறுத்துவதற்கான மெல்லிய முயற்சி இது.

இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையையும், வேட்டையாடுவதற்கான அர்த்தமற்ற முயற்சிகளையும் நீதித்துறை கடந்து செல்லும் என்று நாங்கள் நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, நடக்காத ஒரு குற்றத்தை இட்டு கட்டியதற்காக அமலாக்கத்துறை மற்றும் பாஜ அரசு ஆகியவை நோபல் பரிசு பெறுவதற்கு தகுதி உடையவை.மோசமடைந்து வரும் பொருளாதாரம், வேலையின்மை மற்றும் தோல்வியடைந்த வெளியுறவுக் கொள்கையிலிருந்து நாட்டுமக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கான முயற்சியாகும் இது என்றார்.

Related Stories: