சென்னை: சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் மேலாண்மை மையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தற்போது டிட்வா புயல் வடக்கு நோக்கி செல்லும் என்றுதான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்தது. இயற்கையை மீறி ஒரே இடத்தில் சென்னைக்கு அருகே புயல் தாக்கம் இருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை காற்றதழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
அப்படி மாறும்போது, தமிழகத்தில் மகாபலிபுரத்தில் இருந்து உள்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வரக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. அந்த பகுதிகளில் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் சொல்லி இருக்கிறது. அங்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு சொல்லி நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று முன்தினம் முதல்வர் வேளாண்மை பயிர்களுக்காக நிவாரணம் அறிவித்திருக்கிறார். ஒரு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் என்று அறிவித்ததோடு நில்லாமல், அதை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.
இப்போது பெய்யும் மழையால் பாதிக்கப்பட்ட பயிர் சேத விவரங்களையும் உடனடியாக கணக்கெடுக்க சொல்லி முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அந்த அடிப்படையில் கணக்கெடுக்கும் வேலையும் நடந்து கொண்டிருக்கிறது. 55 இடங்களில் உள்ள நிவாரண முகாம்களில் 1527 குடும்பங்களை சார்ந்த 3534 பேர் தங்க வைத்திருக்கிறோம். அவர்களுக்கு வேண்டிய உணவு, உடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் மழை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்தனர்.
இதில் மயிலாடுதுறை, விழுப்புரம் பகுதியில் 2 பேர் மின்சாரம் பாய்ந்தும், தூத்துக்குடி, தஞ்சாவூரில் 2 பேர் சுவர் இடிந்து விழுந்து இறந்துள்ளனர். 582 கால்நடைகள் இறந்துள்ளது. 1601 குடிசை வீடுகள் சேதம் அடைந்துள்ளது.
இந்த சேத விவரங்களையும் மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்து அவர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண உதவிகள் உடனடியாக வழங்கப்படும். தற்போது பெய்துள்ள மழை காரணமாக 85,500 ஹெக்டேர் பயிர் பாதிப்பு இருப்பதாக தோராயமாக கணக்கெடுப்பு நடத்தியுள்ளோம். மழை நீர் வடிந்ததும் சரியான கணக்கெடுப்பு செய்து வேண்டிய நிவாரண தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
* கணிக்க முடியவில்லை
இந்த மழையை பொறுத்தவரை நம்ம கணிப்புக்குள்ளே அது வரவில்லை. வானிலை ஆய்வு மையம் கணிப்புக்குள்ளேயும் வரவில்லை, தனியார் ஆய்வு மைய கணிப்புக்குள்ளேயும் வரவில்லை. சென்னையை அடுத்து ஆந்திரா பக்கம் போகும் என்றுதான் அவர்கள் நமக்கு சொல்லி இருந்தார்கள். அதை தாண்டி இந்த புயல் சென்னைக்கு பக்கத்திலேயே நின்றுவிட்டது. அதேநேரம் புயலாக இல்லாமல், அது வலுவிழந்ததால் நமக்கு பாதிப்பு குறைவாக இருக்கிறது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார்.
