469வது ஆண்டு கந்தூரி விழா: நாகூர் தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலம்

 

நாகை: நாகூர் ஆண்டவர் தர்காவில் 469வது ஆண்டு கந்தூரி விழாவையொட்டி சந்தன கூடு ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு 469வது கந்தூரி விழா கடந்த 21ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தாபூத்து என்னும் சந்தனக்கூடு ஊர்வலம் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. நாகப்பட்டினம் அபிராமி அம்மன் திருவாசலில் இருந்து ஸ்தூபி இசை, தாரை, தப்பட்டை உள்ளிட்ட வாத்தியங்கள் முழங்க சந்தனக்கூடு புறப்பட்டது.

சந்தனக்கூடு ஊர்வலம் சந்தன மகாலை நேற்று அதிகாலை 4 மணிக்கு வந்தடைந்தது. பின்னர் சந்தனக்குடம் தர்கா உள்ளே கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து சந்தன குடங்கள் தர்காவில் உள்ள நாகூர் ஆண்டவர் சமாதி அறைக்கு கொண்டு செல்லப்பட்டு துவா ஓதி ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்பட தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

 

Related Stories: