தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம் சென்னையை டிட்வா புயல் தாக்குமா? அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விளக்கம்

சென்னை: புயல் எங்கு கரையை கடக்கும் என தற்போது வரை தெரியவில்லை. இருந்தபோதிலும் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார். ‘டிட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வருவதால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது புயலின் தாக்கம், எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை நிலவரம் குறித்து கேட்டறிந்த அமைச்சர் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து டிட்வா புயல் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:

நாகையில் இரு பகுதிகளில் அதிக மழைப்பொழிவு இருந்தது. மழையால் இதுவரை மிகப்பெரிய பாதிப்பு இல்லை. அந்தந்த மாவட்ட கலெக்டர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது. புயல் கரையை கடக்கும்வரை வெளியே வரவேண்டாம் என்ற முதல்வரின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடந்தது.

நாகை மாவட்டம் தோப்புத்துறையில் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சென்னையை ஒட்டி புயல் செல்லும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் கடற்கரையோரம் யாரும் செல்ல வேண்டாம். 28 பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 10 குழுக்கள் பிற மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வரவைக்கப்பட்டுள்ளனர். விமானப்படை மற்றும் கடலோர காவல் படைக்கும் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

இன்று மழை பாதிப்பை பொறுத்து தேவையான மாவட்டங்களுக்கு கூடுதல் கண்காணிப்பு அலுவலர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளுக்காக ஹெலிகாப்டர்களின் உதவியை நாடவும் அறிவுறுத்தி இருக்கிறோம். இதுவரை போக்குவரத்து பாதிப்பு, உயிரிழப்பு இல்லை. 16 கால்நடைகள் மரணமடைந்துள்ளன, 24 குடிசைகள் சேதம் அடைந்துள்ளன.

எந்தெந்த துறை அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பார்த்து, துறை சார்ந்த மூத்த அதிகாரிகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான நிவாரண முகங்கள் தயார் நிலையில் உள்ளன. டிட்வா புயல் சென்னையை தாக்குமா என்பதை வானிலை மையம் தெளிவாகத் தெரிவிக்கவில்லை. இருந்தபோதிலும் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுத்துள்ளோம்.

திருமண மண்டபங்களை தற்காலிக முகாம்களாக மாற்ற அறிவுறுத்தியுள்ளோம். ஒரு கோடியே 24 லட்சம் பேருக்கு புயல் முன்னெச்சரிக்கை குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரத்திற்கு பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் எங்கு கரையை கடக்கும் என தற்போது வரை தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: